லிட்டில் இந்தியாவில் தேக்கா சென்டர் கடைக்காரர் ஒருவருக்கு கிருமித்தொற்று

லிட்டில் இந்தியாவில் தேக்கா சென்டர் கடைக்காரர் ஒருவருக்கு கிருமித்தொற்று

1 mins read
ba5a9f0a-db31-41ae-971d-5c03a15c12d0
தேக்கா சென்டரிலும் அதன் அருகிலும் அதிகாரிகள் சந்தைக்கடைக்காரர்களை வியாழக்கிழமை பரிசோதித்தபோது அவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.  படம்: சிஎம்ஜி -

சிங்கப்பூரில் இன்று புதிதாக ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் உள்ளூரில் சமூகத்தொற்றுக்கு ஆளானார்.

தேக்கா சென்டரிலும் அதன் அருகிலும் அதிகாரிகள் சந்தைக்கடைக்காரர்களை வியாழக்கிழமை பரிசோதித்தபோது அவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமி புதிதாக தொற்றிய மற்ற ஐவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இன்று புதிதாக கொரோனா கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து மொத்தம் 58,205 பேர் பாதிக்கப்பட்டனர்.

இங்கு 19 நாட்களில் இரண்டாவது நாளாக இன்று உள்ளூரில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 16 நாட்களாக உள்ளூரில் யாருக்குமே தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று முதலாவதாக 32 வயது சிங்கப்பூரருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது தெரியவந்தது.

கடல் சேவைத் துறையைச் சேர்ந்த பொறியாளரான அவர், தெம்பனிஸ் மாலில் உள்ள 'சோல் கார்டன்' உணவகத்தில் குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் சேர்ந்து உணவு உண்டார்.

அவர் தொடர்பிலான கிருமித்தொற்று குழுமத்தில் பலர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்றாலும் அது மிகப் பெரிய குழுமமாக உருவெடுக்கும் சாத்தியம் குறைவு என நிபுணர்கள் கருத்துரைத்தனர்.

வெள்ளிக்கிழமை புதிதாக கிருமி தொற்றிய நால்வரும் இந்தியாவில் இருந்தும் இந்தோனீசியாவில் இருந்தும் வந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்