ஜனவரியில் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் திளைக்கும் ஆதரவாளர்கள்

2 mins read
58bb7ee8-a042-498c-aa96-2b5f25910949
தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகவும் ஆர்.அர்ஜுனமூர்த்தியும் உடன் இருப்பதாக ரஜினி குறிப்பிட்டார். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

ஜனவரி 2021ல் கட்சி தொடங்க இருப்பதாகவும் தேதி குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

"வருகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

அதனையடுத்து போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடையே பேசினார் ரஜினிகாந்த்.

மக்களைச் சந்தித்து பின்னர் கட்சி ஆரம்பிக்க வேண்டுமென நினைத்ததாகக் குறிப்பிட்ட ரஜினி, கொரோனா சூழலால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க முடியாமல் போனது என்றார்.

தமது உடல்நலத்தையும் குறிப்பிட்டுச் சொன்ன ரஜினி, அதன் காரணமாகவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க முடியாத நிலையை விளக்கினார்.

"தற்போது அவர்களுக்காக என் உயிரே போனாலும் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இருக்க முடியாது. நான் கொடுத்த வாக்கை நான் என்றுமே மீற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். காலத்தின் தேவை ரொம்ப முக்கியம். மாற்ற வேண்டும். அனைத்தையும் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும்.

"இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. அதை மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும். நான் வருவேன், அந்த மாற்றத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகவும் ஆர்.அர்ஜுனமூர்த்தியும் உடன் இருப்பதாக ரஜினி குறிப்பிட்டார்.

"தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம்," என்றார் அவர்.

பல ஆண்டுகளாக ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவரது ரசிகர்கள், இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்