கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும்போது அவற்றை சிங்கப்பூருக்கு கொண்டு வரவும் சிங்கப்பூர் வழியாக மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் முன்னுரிமை அளிக்கும்.
தடுப்பூசி மருந்துகளை விமானங்களில் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டங்களை விரைவில் நடத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இத்தகையை சோதனை ஓட்டங்களை நடத்தி வருகின்றன.
"எஸ்ஐஏ விமானங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான இடம் ஒதுக்கப்படும். அதற்காக போயிங் 747-400 ரக விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்படும். பெரிதளவில் தடுப்பூசி மருந்துகளைக் கொண்டு வருவதற்கான தேவை ஏற்படும்போது, பயணிகள் விமானங்கள் சரக்கு விமானங்களாகப் பயன்படுத்தப்படும்," என்று எஸ்ஐஏ இன்று தெரிவித்தது.
தடுப்பூசி மருந்துகளைக் கொண்டு வரத் தொடங்கும்போது அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதை உறுதி செய்ய, குளிர்ந்த கொள்கலன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளில் எஸ்ஐஏ கையெழுத்திட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஐஏவின் சரக்குப் பிரிவுக்கான மூத்த உதவித் தலைவர் சின் யாவ் செங், "இது சம்பந்தமாக தடுப்பூசி மருந்து உற்பத்தியாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தடுப்பூசி மருந்துகளைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு குறித்த யோசனைக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்,
"சோதனை ஓட்டங்கள் குறித்த மேல் விவரங்களை நாங்கள் இறுதிப்படுத்தி வருகிறோம்," என்று கூறினார்.
இத்தகைய சோதனை ஓட்டங்களின்போது உண்மையான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளைத்தான் கொண்டுசெல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, விமானப் பயணத்தின்போது உணர்கருவிகள் மூலம் தடுப்பூசி பொட்டலங்களில் வெப்பநிலையைக் கண்காணிக்க முடியும்.
"உண்மையான தடுப்பூசி மருந்துகளைக் கொண்டு சோதித்துப் பார்ப்பது நல்லதுதான். அது தொடர்பில் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்," என்றார் திரு சின்.
தொடர்புடைய செய்திகள்
தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்கள், தடுப்பூசிகள் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க உதவும் கருவிகள் எஸ்ஐஏ விமானங்களில் பயன்பாட்டிற்கு சான்றளிக்கப்பட்டுள்ளன.
பெரிதளவிலான மருந்துப் பொருட்களைக் கையாண்டு அவற்றைச் சேமித்து வைப்பதற்கு சிங்கப்பூர் தயாராக இருப்பதை உறுதி செய்ய சாட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்ஐஏ பணியாற்றி வருகிறது.


