ஐந்து மாத நரக வேதனைக்குப் பின் நாடு திரும்ப ஏங்கும் பங்ளாதேஷியர்

ஐந்து மாத நரக வேதனைக்குப் பின் நாடு திரும்ப ஏங்கும் பங்ளாதேஷியர்

2 mins read
3274909f-2309-4623-8942-fbaf1b32829f
-

ஐந்து மாதங் களாக கொரோனா கிருமித் தொற்றுடன் கடுமையாகப் போராடி மீண்டு வந்துள்ள பங்ளாதேஷ் ஊழியர் சொந்த நாடு திரும்ப மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் திரு ராஜு சர்க்கார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது கடந்த மார்ச் மாதத்தில் பங்ளாதேஷில் அவரது மனைவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தையை திரு சர்க்கார் இன்னும் நேரில் சென்று பார்க்கவில்லை.

தற்போது அந்தக் குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. கைபேசியில் அக்குழுந்தை முதல்முறையாக திரு சர்க்காரிடம் 'பாபா' என்று அழைத்தபோது திரு சர்க்கார் அழுதுவிட்டார். 'பாபா' என்பது வங்காள மொழியில் அப்பா என்று பொருள்.

40 வயது திரு சர்க்காருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது கடந்த பிப்ரவரி மாதமு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவருக்கு ஏறத்தாழ ஐந்து மாதங்களாக டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பாதி நேரம் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து கடந்த ஜூன் மாதத்தில் அவர் வசிப்பிடம் திரும்பினார்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தபோதிலும் குறைந்த சிவப்பு அணுக்கள், இதய பலவீனம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது தாம் குணமடைந்துவிட்டதாகவும் மருந்து உட்கொள்ளத் தேவையில்லை என்றும் திரு சர்க்கார் கூறினார். முழுமையாகக் குணமடைந்துறவிட்டதாக இம்மாதத்துக்குள் மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்று பங்ளாதேஷ் திரும்ப விரும்புகிறார் திரு சர்க்கார். வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமது குடும்பத்தைக் காண அவர் விழைகிறார்.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கு முன்பு திரு சர்க்காரின் உடல் எடை 64 கிலோவாக இருந்தது. ஐந்து மாத நரக வேதனையில் அவரது உடல் எடை 40 கிலோவாகக் குறைந்தது. தற்போது அவரது உடல் எடை 59 கிலோவாக உள்ளது. அவர் மிகவும் விரைவாக குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பியிருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

இதற்கிடையே, திரு சர்க்காரின் நீண்டகாலப் பணித்திட்டம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கு முன்பு அவர் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தார்.

தற்போது தமது உடல் வலிமை முன்பு போல இல்லை என்றும் அதற்கு ஏற்றாற்போல் தமது முதலாளி தமக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று திரு சர்க்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருவேளை இந்த நடக்காவிடில் பங்ளாதேஷுக்குத் திரும்பி அங்கேயே இருந்துவிடக்கூடும் என்றார் அவர்.

தமது மாமனார் மளிகைக் கடை ஒன்றை வைத்திருப்பதாகவும் அங்கு வேலை செய்ய தம்மை அழைத்திருப்பதாகவும் திரு சர்க்கார் தெரிவித்தார். மானியம் வழங்கி அல்லது அரசாங்கப் பணி வழங்கி பங்ளாதேஷ் அரசாங்கம் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் தம்மால் தமது குடும்பத்துக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார் அவர்.