பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கை இந்த வாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தடுப்பூசி இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அந்நாட்டின் 94 வயது எலிசபெத் மகாராணி தடுப்பூசி யைப் போட்டுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேவேளையில், அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமை தடுப்பூசி இயக்கம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் உருவாக்கி இருக்கும் தடுப்பூசி மருந்தை கொவிட்-19 கிருமிப் பரவலை ஒழிப்பதற்கான தற்காலிக அவசர மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் அங்கீகரித்து இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனும் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. ஐரோப்பா நாடான சுவிட்சர்லாந்து ஜனவரி மாதம் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபைசர் மருந்தை தற்காலிக அவசர மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறை அங்கீகரிக்கும் பட்சத்தில், தடுப்பூசி இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அந்தத் துறையின் ஊசி மருந்து ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜேம்ஸ் ஹில்ரெத் கூறியதாக என்பிசி நியூஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கொவிட்-19 கிருமி உலகம் முழுவதும் 1.5 மில்லியனுக்கும் அதிக மக்களைக் கொன்றுவிட்டது. கிருமித்தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் கொவிட்-19 தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை ஆக அதிக எண்ணிக்கையில் மக்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.
அன்று ஒரு நாள் மட்டும் 227,885 பேர் பாதிக்கப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் சனிக்கிழமை மட்டும் 2,527 பேர் மாண்டு இருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14.6 மில்லியனைத் தாண்டிவிட்டது. மரண எண்ணிக்கை ஏறக்குறைய 281,000 ஆக இருக்கிறது.
அதேபோல உலகின் இதர பல நாடுகளிலும் ஒடுங்கி இருந்த கிருமி மறுபடியும் தலையெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
தென்கொரியாவில் ஒன்பது மாத காலத்தில் இல்லாத அளவுக்கு தொற்று கூடியதால் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை சோல் நகரம் கடுமையாக்கி இருக்கிறது.

