உலகிலேயே அதிக அளவு தடுப்பு மருந்து 'டோஸ்'களை வாங்கியுள்ளது இந்தியா

உலகிலேயே அதிக அளவு தடுப்பு மருந்து 'டோஸ்'களை வாங்கியுள்ளது இந்தியா

2 mins read
3abe9a7d-9804-48f1-b732-0f0dcfaab3dc
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியா 1.6 பில்லியன் தடுப்பு மருந்து 'டோஸ்'களை வாங்கியுள்ளது. உலகின் வேறெந்த நாட்டையும்விட இந்தியாதான் அதிக அளவில் தடுப்பு மருந்தை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ரா செனகா ஆகியவை தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 500 மில்லியன் 'டோஸ்'கள், அமெரிக்க நிறுவனமான நோவாவேக்சிடமிருந்து 1 பில்லியன் 'டோஸ்'கள், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தில் 100 மில்லியன் 'டோஸ்'கள் என 1.6 பில்லியன் 'டோஸ்'களை இந்தியா வாங்கியிருப்பதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட டியூக் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சுகாதார புத்தாக்க நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியா வாங்கியுள்ள மருந்தைக் கொண்டு அதன் 60% மக்கள் அல்லது 800 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட முடியும்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் சுமார் 300 மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என இந்தியாவின் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கடந்த மாதம் கூறியிருந்தார்.

பணக்கார நாடுகள் பொது நிதியைக் கொண்டு தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ள நிலையில், இந்தியா மாற்று உத்தியைக் கையாண்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு இருப்பதால், அந்த ஒப்பந்த அடிப்படையில் அது தடுப்பு மருந்துதை வாங்கியுள்ளது.

உலக அளவில் ஆக அதிகமாக, அதாவது 60% தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது. புனேயைத் தளமாகக் கொண்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்.

ஆக்ஸ்ஃபர்ட் - ஆஸ்ட்ரா செனகா, நோவாவேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க சீரம் நிறுவனத்தை அணுகியுள்ளன.

அவ்விரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளில் 3.73 பில்லியன் டோஸ்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 3 பில்லியன் டோஸ்கள் சீரம் நிறுவனத்தில் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேப் எனும் நிறுவனத்தில் தயாராகும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், குஜராத்தை தளமாகக் கொண்ட ஸைடஸ் கேடில்லா ஆகிய நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கக்கூடியவை.

ஐரோப்பிய ஒன்றியம் 1.58 பில்லியன் டோஸ்களுக்கும் அமெரிக்கா 1.01 பில்லியன் டோஸ்களுக்கும் முன்பதிவு செய்துள்ளன.

அதிகாரபூர்வமாக தடுப்பூசிகளை ஒழுங்குமுறை முகவைகள் அனுமதிக்கும் முன்பே சுமார் 7.3 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை நாடுகள் வாங்கியுள்ளன. இன்னும் 2.5 பில்லியன் டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்