தெம்பனிசில் உள்ள ஐந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மின்தூக்கி நிற்கும் தளங்களில் தண்ணீர், மின்சாரப் பயனீட்டுத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்னிலக்கப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த முன்னோட்டத் திட்டத்தின் மூலம் அந்த புளோக்குகளில் வசிக்கும் 633 குடும்பங்கள் அந்தந்த புளோக்குகளின் தண்ணீர், மின்சாரப் பயன்பாட்டைக் காணலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் தாங்கள் வசிக்கும் புளோக்கின் மொத்த தண்ணீர், மின்சாரப் பயன்பாடு, கரியமில வாயு வெளியேற்றம் குறித்த ஆக அண்மைய தகவல்களை இந்தப் பலகை காட்டுகிறது.
தண்ணீர், மின்சாரப் பயன்பாட்டைக் குடியிருப்பாளர்கள் எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்த குறிப்புகளையும் இந்தப் பலகை வழங்குகிறது. அதோடு, மற்ற புளோக்குகளுடன் சேர்ந்து நடத்தப்படும் எரிசக்தி சேமிப்புப் போட்டிகளிலும் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.
புளோக் 878ஏ தெம்பனிஸ் அவென்யூ 8ல் இன்று நடைபெற்ற இந்த மின்னிலக்கப் பலகை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் வட்டாரமாக தெம்பனிசை உருமாற்றும் தெம்பனிஸ் நகர மன்றத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மின்னிலக்கப் பலகைகள் அமைவதாகச் சொன்னார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ், 2030க்குள் ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை 130 லிட்டராகக் குறைக்க சிங்கப்பூர் முற்படுவதாகத் தெரிவித்தார். தற்போது ஒவ்வொருவரின் அன்றாட தண்ணீர்ப் பயன்பாடு 140 லிட்டராக உள்ளது.
"இந்த நிலையை எட்ட, செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம் உள்ளன. முதலாவதாக, தண்ணீர்ப் பயன்பாடு குறித்து மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், குடியிருப்பாளர்கள் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அவர்களுக்குத் தகவல் மூலம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு காலப்போக்கில் தண்ணீர்ப் பயன்பாட்டை குறைக்க அவர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதைச் சொல்ல வேண்டும்," என்றார் அமைச்சர்.

