கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் ஊழியர்கள் கூடுதல் பலன்பெறும் வகையில் புதிய மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொவிட்-19 மீட்சி மானியம் (சிஆர்ஜி) என்னும் அத்திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிவித்தது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரை ஆதரிக்க ஏற்
கெனவே நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் வேலையையும் வருமானத்தையும் தொடர்ந்து இழந்து வருவோருக்கு உதவ புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்கள் மானியம் பெற 2021 ஜனவரி 18 முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை விண்ணப்ப காலம் நீடிக்கும்.
தற்போது நடப்பில் உள்ள கொவிட்-19 ஆதரவு மானியம் அல்லது சுயதொழில் புரிவோர் தனிநபர் வருவாய் நிவாரணத் திட்டம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டது புதிய மானியத் திட்டம். கொவிட்-19 ஆதரவு மானியம் பெற இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல சுயதொழில் புரிவோர் தனிநபர் வருவாய் நிவாரணத் திட்டம் ஆண்டிறுதியில் காலாவதியாகிவிடும்.
ஆனால் புதிய திட்டம் அடுத்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும். புதிய கொவிட்-19 மீட்சி மானியம் (சிஆர்ஜி) பாதிக்கப்பட்டோருக்கு வெவ்வேறு வகையில் பலனளிக்கும். ஆட்குறைப்பு அல்லது விருப்பமற்ற வேலை ஒப்பந்த ரத்து ஆகியவற்றால் வேலை இழந்தோர்.
தன்விருப்பமின்றி தொடர்ச்சியாக குைறந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு சம்பளமில்லா விடுப்பில் வைக்கப்பட்டோர்.
-இவ்விரு பிரிவினரும் அதிகபட்சமாக மாதம் $700 வரை மூன்று மாதங்களுக்கு பெறுவர்.
அதேபோல, தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்சம் 50% சராசரி சம்பள வெட்டுக்கு ஆளான ஊழியர்கள்.
தொடர்ச்சியாக குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை 50% சராசரி நிகர வர்த்தக வருவாயை இழந்த சுயதொழில் புரிவோர். (2019 அல்லது 2020ஆம் ஆண்டில் சராசரி நிகர வர்த்தக மாத வருவாயோடு ஒப்பிட்ட பின்னர் கணக்கிடப்படும் இழப்பு).
-இந்தப் பிரிவினருக்கு மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் $500 மானியம் வழங்கப்படும்.
இந்த இழப்புகள் எல்லாம் இவ்வாண்டு ஜனவரி 23க்குப் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டும். சிங்கப்பூரில் முதல் கொவிட்-19 கிருமித்தொற்று அந்த நாளில்தான் உறுதி செய்யப்பட்டது.
புதிய திட்டம், குறைந்த குடும்ப வருமானப் பிரிவினர் மற்றும் அதிக வருவாய் இழப்புக்கு ஆளானோருக்கு மானியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
மானியத்திற்குத் தகுதிபெற, கொவிட்-19 சூழலால் பாதிக்கப்
படுவதற்கு முன்பு வரை மொத்த மாதாந்திர குடும்ப வருமானம் $7,800 அல்லது அதற்குக் கீழ் பெற்று வந்திருக்க வேண்டும். அல்லது மாதாந்திர தனிநபர் வருமானம் $2,600 அல்லது அதற்குக் கீழ் இருந்திருக்க வேண்டும்.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு வரை அவர்கள் வருவாய் ஈட்டும் செயல்திறனைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, 2019 ஜனவரிக்கும் இவ்வாண்டு டிசம்பருக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது அவர்கள் வேலையில் இருந்திருக்க வேண்டும்.
அதேபோல, சுயதொழில் புரிவோர் தங்களது நிகர வர்த்தக வருவாயை 2019 அல்லது 2020ல் அறிவித்திருக்க வேண்டும். வேலைதேடிக்கொண்டு இருப்பதற்கான சான்றுகளை காட்டுவதும் மானியம் பெறுவதற்கான தகுதிகளில் ஒன்று. அல்லது அரசாங்கம் தொடர்பான இணையத்தளங்கள்வழி திறன்மேம்பாட்டுக்கு விண் ணப்பித்தது, நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டது, வேலைப் பயிற்சியில் பங்கெடுத்தது ஆகியவற்றுக் கான சான்றை தரவேண்டும்.
அமைச்சின் இணையத்தளத்தில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மானியத் திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் உதவி தேவைப்படுவோர் 1800-222-0000 என்னும் காம்கேர் நேரடி தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அல்லது Ask_SSO@msf.gov.sg என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இணையம் வழி விண்ணப்பம் செய்ய இயலாதோர் அருகில் உள்ள சமூக சேவை அலுவலகத்தை உதவிக்கு நாடலாம்.

