உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்திருக்கும் ஏமனில் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டை ஆண் குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்நாட்டின் தலைநகர் சனாவிலுள்ள மருத்துவமனை அறிவித்தது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பிறந்த அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றின் இதயம் சரியான இடத்தில் இல்லை என்று அல் சபீன் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மஜ்டா அல் காத்திப் தெரிவித்தார். மருத்துவமனையின் வசதி குறைந்த அளவில் இருப்பதால் குழந்தையின் எந்தெந்த உடல் உறுப்புகள் இணைந்துள்ளன என்பதை மருத்துவர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
2014ஆம் ஆண்டு முதல் ஏமனிய தலைநகரை ஈரானின் ஆதரவைப் பெற்றுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. அந்நாட்டு அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பூசல், ஏற்கெனவே நலிந்திருக்கும் சுகாதாரத் துறையை மேலும் பாதித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள கூட்டணி நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சனாவின் விமான நிலையத்தில் அனைத்துலக பயணங்கள் இல்லை. ஆயினும், அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த இரட்டைக் குழந்தைகள் வெளிநாட்டில் சிகிச்சை பெறும் வாய்ப்பு நிச்சியம் உள்ளதாக குழந்தைகளுக்கு உதவிவரும் மருத்துவமனை தெரிவித்தது.

