சிங்கப்பூர் தென் தீவுகள், உபின் தீவு ஆகியவற்றுக்கு அண்மையில் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மரினா சவுத் பியர், சாங்கி பாயிண்ட் படகு முனையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் தூதர்களைப் பணியமர்த்துவது, படகு முனையம் போன்ற கூட்டமான பகுதிகளில் மக்கள் வரிசையில் நிற்பதற்கு வசதி ஏற்படுத்தித் தருவது உள்ளிட்டவை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும். கொவிட்-19 சூழல் காரணமாக அனைத்துலகப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வாரயிறுதிகளில் சிங்கப்பூரின் தென் தீவுகளுக்கு அதிகமானோர் படையெடுக்கின்றனர். இத்தகைய சூழலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கூறப்பட்ட இந்த ஏற்பாடுகள் உதவும்.
கடலில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கவனமாக இருக்கும்படி ஆணையம் நினைவூட்டியது. வேகமாக எழும் கடல் அலை, நீருக்கு அடியில் ஏற்படும் ஆபத்துகள் போன்றவற்றுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.
உயிர் காப்பாளர்கள் பணியில் இருக்கும் பகுதிகள், நீந்துவதற்காக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மக்கள் நீச்சல் அடிக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
சிங்கப்பூரில் தற்போது பருவமழை நீடிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் அது முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"பருவமழையால் இம்மாதம் முதல் அடுத்த மாத ஆரம்பப் பகுதி வரை பல இடங்களிலும் தொடர் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றும் பலமாக வீசும் என்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும்," என்று ஆணையம் விவரித்தது.
இதற்கிடையே, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி துறைமுகப் பகுதி மற்றும் படகு உரிமையாளர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கப்பல் சிப்பந்திகள் தங்களைப் பரிட்சயப்படுத்திக்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

