கொவிட்-19 கிருமித்தொற்று, விமானப் பயணத்தை ஏறக்குறைய முடக்கிவிட்டது. ஆனாலும் பொதுப் போக்குவரத்து மீண்டு வருகிறது. அதே நேரத்தில், கடல் சரக்கு போக்குவரத்து கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையிலேயே ஏறக்குறைய இருக்கிறது. போக்குவரத்து அமைச்சு நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்தை இப்போது பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு தொடக்கத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோர் அளவுடன் ஒப்பிடும் போது 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறது என்று அமைச்சு நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் ஏறக்குறைய ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இடம்பெற்ற விமானப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 0.004 விழுக்காடாக இருந்தது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வருகிறது.
நவம்பரில் இந்த அளவு 0.019 விழுக்காடாக இருந்தது. இருந் தாலும் விமானப் போக்குவரத்து இன்னமும் சவால்மிக்கதாகவே இருந்து வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தனிப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தைப் பார்க்கையில், பேருந்து, ரயில்களில் நாள் முழுவதும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு எப்படி குறைந்து வந்தது என்பதை அமைச்சின் புள்ளிவிவரங்கள் விளக்குகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அளவுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் பொதுப் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை 32 விழுக்காட்டுக்கு குறைந்தது.
இந்தக் குறைவு மே மாதம் மேலும் அதிகரித்து 25% ஆக இறங்கியது. என்றாலும் அதற்குப் பிறகு பொதுப் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக கூடி, சென்ற மாதம் 72 விழுக்காட்டை எட்டி இருக்கிறது. கடல்துறையின் செயல்திறனைப் பார்க்கையில், கொவிட்-19 சிரமமான காலகட்டத்திலும் ஒளிமயமான துறையாக இது திகழ்கிறது என்று அமைச்சர் ஓங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரின் கடல் சரக்குக் கொள்ளளவு ஏறக்குறைய ஒரே நிலையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த அளவு 97% ஆக இருந்தது. கடல்துறைத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கடல்துறையை மின்னிலக்கமயமாக்கவும் அதில் புத்தாக்கத்தைப் புகுத்தவும் கடல்துறையுடன் மிக அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஓங் கூறினார்.

