கொவிட்-19 கொள்ளைநோய் நமது இயல்பான வாழ்க்கை, பொருளியல் நிலைமை, சுகாதாரக் கேடுகள் என பல வழிகளிலும் நமக்குப் பெரும் பிரச்சினைகளைக் கொடுத்திருந்தாலும் சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒருவித நன்மையைத்தான் அளித்துள்ளது எனலாம்.
காரணம், வெளிநாட்டு ஊழியர்களை கொவிட்-19 பெருமளவில் பாதித்ததால்தான் அவர்களுக்குள்இருந்த வெளிவராத பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்தன என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் தெரிவித்துள்ளார்.
'சூ சி' மனிதநேய இளையர் நிலையமும் 'எ குட் ஸ்பேஸ்' அமைப்பும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த "2020 பிரதிபலிப்புகள்: நமது வெளிநாட்டு ஊழியர்களின் குரல்கள்" எனும் கருத்தரங்கில் திரு இங் பேசினார்.
"வெளிநாட்டு ஊழியர்கள் நமது நாட்டின் பொருளியலுக்கு உதவும் வகையில் அயராது பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் சமூகத்தின் காதுகளுக்கு எட்டுவதில்லை.
"ஆகவே இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களே தங்களுக்குள்ள பிரச்சினைகள், சிரமங்கள் பற்றி நேரடியாக எல்லாரும் கேட்கும் வகையில் கூறுவது மிகவும் முக்கியமானது. அவற்றைக் கேட்டு நாம் அவர்களுக்கு எந்த வழிகளில் உதவலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்," என்றும் திரு இங் வலியுறுத்தினார்.
பொருள் விநியோகிக்கும் ஊழியராக கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்யும் திரு சியாகிரின் அகம்மது எனும் 27 வயது மலேசியர், இங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் திருவாட்டி அமினியாத்தி மாத்தின் எனும் 46 வயது இந்தோனீசியர், கட்டுமானப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இங்கு பணியாற்றும் திரு சோரிப் அகம்மது எனும் 28 வயது பங்ளாதேஷ் ஊழியர் என மூவர் தங்கள் கதைகளையும் அனுபவங்களையும் கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.
ஈசூனில் உள்ள 'சூ சி' மனிதநேய இளையர் நிலையத்தில் கூடிய பொதுமக்கள், வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் ஆகியோர் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது. பலர் 'ஸூம்' வழி கருத்தரங்கை இணையத்திலும் கண்டனர்.
கருத்தரங்குக்குப் பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் செய்த கைவினைப் பொருட்களை அனைவரும் பார்வையிட்டனர்.
இந்தக் கைவினைப் பொருட்களை நாளை (டிசம்பர் 29) வரை ஈசூனில் உள்ள 'சூ சி' மனிதநேய இளையர் நிலையத்தில் காணலாம்.

