ஆக்ஸ்ஃபர்ட் - ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியின் அவசர காலப் பயன்பாட்டுக்கு பிரிட்டன் ஒப்புதல் வழங்கிய செய்தி கிடைத்ததும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தியத் தயாரிப்பு தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கான பரிசீலனையில் இறங்கினர்.
மகாராஷ்டிராவின் புனே நகரைத் தளமாகக்கொண்ட சீரம் ஆய்வுக்கழகமும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்திய அதிகாரிகள் விரைவில் ஒப்புதல் வழங்க இருக்கிறார்கள். காரணம், இந்தத் தடுப்பூசி ஆக்ஸ்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ரஸெனிகா கூட்டு ஆராய்ச்சியோடு இணைந்து இந்த இரு நிறுவனங்களும் உருவாக்கி உள்ளன.
தங்களது தடுப்பூசி தொடர்பாக கூடுதல் தரவுகளை சீரம் ஆய்வுக்கழகமும் பாரத் பயோடெக்கும் வழங்கி உள்ளன. அதன் மீதான ஆய்வை இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பைச் சேர்ந்த நிபுணர் குழு இன்று நடத்த உள்ளது.
ஆய்வு மற்றும் பரிசீலனைக்குப் பின்னர் அவசரகாலப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பெற்றுவிடும். அதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடுவது தொடங்கும். அது நிகழ்வது இன்னும் சில மாதங்கள் அல்லது வாரங்கள் என்று சொல்வதைக் காட்டிலும் சில நாட்கள் என்றே கூறலாம் என டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
"ஆக்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருப்பது என்பது மிகவும் நல்ல தகவல். அதேபோன்ற தடுப்பூசியைத்தான் இந்திய நிறுவனங்கள் தயாரித்து உள்ளன. இந்தத் தடுப்பூசியை ஃபைசர் தடுப்பூசியைப் போல் அல்லாது இரண்டு முதல் எட்டு டிகிரி சென்டி கிரேடில் எளிதாகச் சேமித்து வைக்க முடியும். ஃபைசர் தடுப்பூசிக்கு மைனஸ் 70 டிகிரி சென்டி கிரேட் தேவைப்படும். ஆனால் இந்தியத் தடுப்பூசியை சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்த முடியும்," என்று திரு குலேரியா கூறியுள்ளார்.
அவரது கூற்றுப்படி இந்த ஜனவரி மாதமே இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆறு மாதங்களில், அதாவது ஜூலை மாதம் வரை முதற்கட்ட தடுப்பூசித் திட்டம் தொடரும். அந்தக் காலகட்டத்தில் சுமார் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது.

