புத்தாண்டு தினமான நேற்று சிங்கப் பூரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக பிற்பகலில் ஐந்து இடங்களில் திடீர் வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜாலான் சீவியூ, மவுண்ட்பேட்டன் ரோடு ஆகிய இடங்களுக்குச் செல்வதை அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு பிற்பகல் 12.55 மணிக்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அப்பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் வடிகால்களிலும் 90 விழுக்காட்டுக்கு நீர்மட்டம் அதிகரித்துவிட்டதால் அறிவிப்பு விடுக்கப்படுவதாக கழகம் கூறியது.
பிற்பகல் 2 மணிக்குச் சற்று முன்னர் அது வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்பட்டன. சியாங் குவாங் அவென்யூ, லங்க்சாட் ரோடு/லோரோங் 105 சாங்கி, வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள புளோக் 409 ஆகியன அவை. பிற்பகல் 1 மணிவாக்கில் சிங்கப்பூரின் ஆகக் குறைந்த வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அட்மிரல்டி பகுதியில் பதிவானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளிராகவும் காற்றுவீசக்கூடியதாகவும் இருக்கும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் நேற்று முன்தினம் முன்னுரைத்தது. அடுத்த இரு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் அதே நேரம் பலத்த இடியுடன் கனமழையும் சில நாட்களில் பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த மாதத்தின் முதல் பகுதியில் மழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அன்றாடம் குளிர்ந்த பருவநிலை நிலவும். வெப்பநிலை ஓரிரு நாட்களில் 22 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். இதர நாட்களில் அன்றாட வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ஓரிரு நாட்களில் அன்றாட கூடினபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

