அறவே முடங்கிக் கிடந்த உலகம் 2021 புத்தாண்டை கொஞ்சம் நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலை ஒடுக்கி சமூகத்திடம் அந்தக் கிருமியை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்கும் என்று நம்பப்படுகின்ற தடுப்பூசியுடன் புதிய ஆண்டில் உலகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான நிலை எங்கும் திரும்பிவிடும் என்று இப்போது உலகம் நம்புகிறது. ஆனாலும் இந்த நம்பிக்கை பொய்த்துவிடும் என்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.
ஆகையால் நிதானமாக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளும்படி வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இப்போதைய உலக நிலவரங்களும் இதைத்தான் காட்டுகின்றன. தடுப்பூசியைப் பெற்று அவற்றை மக்களுக்கு போட்டு தற்காப்பு அரணை ஏற்படுத்தி வரும் நாடுகளில் கூட புதிய கொவிட்-19 அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது.
மருந்து கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் போது அவற்றை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் மருந்தைப் பத்திரப்படுத்தி பல இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் புதிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில்தான் சில நாடுகளில் ஓரளவுக்கு நிலவரம் மேம்படும். அந்த நாடுகளின் சமூகத்தில் கொவிட்-19 பரவ முடியாத அளவுக்கு தடுப்பாற்றல் பலப்படும் என்றுயூகிப்பதே சரியானதாக இருக்கும்போல் தெரிகிறது.
உலகில் அதிக மக்கள் வாழ்வது வளரும் நாடுகளில்தான். இவர்களுக்கு மருந்து எப்போது சென்று சேரும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
அநேகமாக 2023ல்தான் இந்த மக்களை கொவிட்-19 தடுப்பூசி எட்டும் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பணக்கார, வளர்ந்த நாடுகள், தங்களுக்கு முதலில் மருந்து வேண்டும் என்று மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்ன தாகவே அதிகளவில் தருவிப்பு ஆணைகளைப் பிறப்பித்துவிட்டன.
அந்த அளவுக்கு உடனடியாக மருந்தை தயாரித்து விநியோகிக்க தெம்பு இல்லாமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாறுகின்றன. ஆகையால் உலகில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஏழை நாட்டு மக்களை தடுப்பூசி எட்டுவதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதால் அவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடிய நிலையிலேயே இருந்துவருவர் என்று எதிர்பார்க்க இடம் உள்ளது.
இப்படி உலகில் சில நாடுகளில் பாதுகாப்பு அரணும் பல நாடுகளில் பாதுகாப்பு இல்லாத நிலையும் இருந்தால் கொரோனா கிருமி இதைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு இன்னமும் ஆட்டம் போடும். இந்தச் சூழலில் பல நாடுகளும் தங்கள் பொருளியலைத் திறந்துவிட முடியாத சூழ்நிலையே நிலவும். திரும்பத் திரும்ப பொருளியல் முடக்கங்களை நடப்புக்குக் கொண்டுவர வேண்டி இருக்கலாம். சுகாதார முறைகளை மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கும்.
இவற்றை எல்லாம் செய்து முடிக்க ஆண்டு கணக்கில் ஆனாலும் வியப்பில்லை. இதனால் உலகப் பொருளியல் மீட்சி பாதிப்படையும் என்பதே திண்ணம் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அதோடு மட்டுமின்றி உலகின் ஒருபுறத்தில் இன்னமும் இருந்துவரும் கிருமிகள், மீண்டும் வளர்ந்த நாடுகளுக்குப் பரவி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
கிருமிச் சூழ்நிலை நீடித்துக்கொண்டே போனால் ஏழ்மையும் வருமான ஏற்றத்தாழ்வும் அதிகரிக்கவே செய்யும். இதனால் இதர பாதக தொடர்விளைவுகளும் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிடும்.
இயற்கை வளங்களுக்குப் பாதிப்புகள் கூடும் என்றும் எதிர்பார்க்க முடியும். சமூக அமைதியும் கெடக்கூடும். ஆகையால் கூடுமானவரை ஆக அதிகமான மக்களைத் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்பதே அவசர அவசியமாகிறது.
இதற்குத்தான் புத்தாண்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதனை உணர்ந்துகொண்டுள்ள 'கொவெக்ஸ்' என்ற அனைத்துலகக் கூட்டு அமைப்பு எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி மருந்து கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறது.
இந்தக் கூட்டு அமைப்பில் சிங்கப்பூர் உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பெற்று இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவைப் பெற்ற இது, உலக மக்களில் குறைந்தபட்சம் 20 விழுக்காட்டினருக்கு கூடிய விரைவில் மருந்து சென்று சேர வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து இருக்கிறது.
இந்த இலக்கை நிறைவேற்ற இது US$2 பில்லியன் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த 20 விழுக்காட்டு இலக்கை நிறைவேற்றவே இந்தத் தொகை போதாது என்று எச்சரிக்கை சங்கு ஊதப்படுகிறது. வளர்ந்த நாடுகள் இதைக் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அதே நேரத்தில் கொவெக்ஸ் அமைப்பு வளரும் நாடுகளில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதோடு மட்டுமின்றி தடுப்பூசி மருந்தைத் தயாரிக்கும் ஆற்றல் பெருக வேண்டும். ஒரே இடத்தில் அல்லாமல் உலகின் பல பகுதிகளிலும் மருந்து தயாரிப்புப் பணிகள் இடம்பெற வேண்டும்.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு, கை பிசைந்து நிற்கும் ஏழை நாடுகளுக்கு நிதிஉதவியும் கிடைக்க வேண்டும். அந்த நாடுகளின் பொருளியல் முடங்கியே கிடக்கும் என்பதால் செலவினத்திற்கான தேவை கூடும். இதைக் கருத்தில்கொண்டு பணக்கார நாடுகளும் இதர நாடுகளும் செயல்பட வேண்டும்.
காரணம் இந்த உலகை விட்டே கொவிட்-19 ஒழிக்கப்பட்டால்தான் அதன் மிரட்டல் அறவே இல்லாமல் போகும். உலகில் ஒரு பக்கத்தில் கிருமியை ஒழித்து மறுபுறம் ஒழிக்க முடியவில்லை என்றால், கையில் ஏராளமான தடுப்பூசியை வைத்திருக்கும் நாடுகள் கூட தப்ப முடியாது.
அந்த நாடுகளையும் மறுபடியும் கொரோனா கிருமி குறிவைக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படி ஒரு சூழ்நிலை மீண்டும் வந்தால் அதை உலகம் தாங்காது. ஆகையால் கொவிட்-19க்கு எதிரான உலகப் போராட்டத்தில் ஏழை நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து முழு வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

