சிங்கப்பூரைப் போலவே மலேசியாவிலும் தொடர் மழை பெய்ததன் காரணமாக ஜோகூரில் ஏராளமானோர் அவர்களின் வீடுகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 6,248 குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 1,628 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இது நேற்று நண்பகல் வரையிலான நிலவரம்.
பாதிக்கப்பட்ட ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய் மற்றும் பத்து பகாட் ஆகிய மாவட்டங்களில் 56 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் தெரிவித்தார்.
காலை நிலவரத்தை விளக்கிய அவர், ஆக அதிகமாக ஜோகூர் பாருவில் 2,452 பேர் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மிகவும் குறைவாக பொந்தியான் மாவட்டத்தில் ஆறு பேர் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வெள்ளம் காரணமாக ஒரு மரணச் சம்பவம் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஜாலான் ஜோகூர் பாரு-கோத்தா மெர்சிங் சாலையில் வெள்ள நீர் 0.2 மீட்டருக்கு மேல் காணப்பட்டதால் அந்தச் சாலை மூடப்பபட்டதாக திரு வித்யானந்தன் கூறினார். இதுபோல 10 பிரதான சாலைகள் நீரில் மூழ்கின. அவற்றில் ஏழு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எவ்விதமான வாகனங்களுக்கும் அவற்றில் அனுமதி இல்லை. சில இடங்களில் சாலைகளை இணைக்கும் பாலங்கள் உடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஜோகூரில் உள்ள மூன்று ஆறு
களின் நீர்மட்டம் அபாயகட்டத்தைக் கடந்தது. சுங்கை லெனிக்கின் நீர்மட்டம் 6.69 மீட்டராகப் பதிவானது. அதன் அபாய அளவு ஆறு மீட்டர். அடுத்ததாக, கோத்தா திங்கியில் உள்ள சுங்கை ஜோகூரின் அபாய அளவான 9.80 மீட்டருக்கும் மேல் 10.44 மீட்டர் என நீர்மட்டம் பதிவானது. இவை தவிர ஜோகூர் பாருவில் உள்ள சுங்கை ஸ்கூடாய் நீர்மட்டம் அபாயகட்டத்தைக் காட்டிலும் இரட்டிப்பானது. அபாய அளவான மூன்று மீட்டரையும் கடந்து 7.03 மீட்டராக அங்கு பதிவானது.

