பங்களாதேஷி ஊழியர் திரு தாஸ் தீப்டோ வேலைக்காக ஞாயிற்றுக்கிழமையன்று ஹவ்காங் ஸ்திரீட் 22 புளோக் 224ற்கு வந்தபோது தமது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. மர இலைகளையும் கிளைகளையும் வெட்டவிருந்த அந்த 27 வயது ஊழியர் இறுதியில் மேல்மாடி சன்னல் ஒன்றின் மதிலில் இருந்த ஆறு வயது என நம்பப்படும் சிறுவனைக் காப்பாற்றினார்.
சிறுவனைக் கண்டதும் திரு தீப்டோ, தமது 'பூம்லிப்ட்' கருவியைப் பயன்படுத்தி அந்தச் சிறுவனைக் கீழே இறக்கினார். இந்தச் சம்பவத்தைக் காண்பிக்கும் திகிலூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. காப்பாற்றப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்றும் மருத்துவ அதிகாரி ஒருவர் அவனுக்கு உதவி செய்திருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசியபோது இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த திரு தீப்டோ, சிறுவனைக் காப்பாற்றுவதில் மட்டும் குறியாக இருந்ததால் அப்போது சிறிய கூட்டம் ஒன்று கூடியிருந்ததை கவனிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
ஐந்து ஆண் பிள்ளைகள் கொண்டுள்ள குடும்பத்தில் ஆக இளையவரான திரு தீப்டோ, யோங் ஐக் கட்டுமானத்துறையின் நில அழகுவேலை பணியில் ஈடுபட்டு வருகிறார். டாக்காவில் நரலி என்ற ஊரில் இவரது குடும்பம் வசிக்கிறது. தாம் சிறுவனைக் காப்பற்றியது குறித்து பெருமையடைந்த தம் தாயார் அவரை தொலைபேசி வழியாகப் பாராட்டியதாகத் தெரிவித்தார். அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது தமது அண்ணன் மகன் நினைவுக்கு வருவதாக திரு தீப்டோ தெரிவித்தார். திரு தீப்டோவுக்கும் அந்நேரத்தில் அவருக்குத் துணையாக இருந்த மற்றோர் ஊழியர் திரு பிஸ்வாசுக்கும் சன்மானத்தை வழங்க யோங் ஐக் கட்டுமான நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி மார்க் ஆங் முடிவெடுத்துள்ளார்..

