குற்ற விசாரணையில் தொடர்பு உடைய அல்லது அதற்கு உதவும் ஒருவரின் திறன்பேசி அல்லது டிரேஸ்டுகெதர் கருவி மூலமாகவே டிரேஸ்டுகெதர் தரவுகளை போலிஸ் பெறும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, தொடர்புகளின் தடமறிவதற்காக மட்டுமே டிரேஸ்டுகெதர் தரவுகள் பயன்படுத்தப்படும் என்று தாம் கூறியதை டாக்டர் விவியன் நினைவுகூர்ந்தார்.
"உண்மையில், அப்போது நான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பற்றி நினைக்கவில்லை," என்றார் அவர்.'அந்தச் சட்டத்தின்கீழ், குற்றவியல் விசாரணைகளுக்காக டிரேஸ்டுகெதர் தரவுகளைப் பெறும் அதிகாரம் போலிசுக்கு உண்டு என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இதையடுத்து, அத்தகைய சூழ்நிலைகளிலும் டிரேஸ்டுகெதர் தரவுகளைப் பயன்படுத்த முடியும் என முன்னதாகக் கூறாததால் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை குறித்துச் சிலர் குறைகூறினர்.
இதுதொடர்பான இணைய விவாதங்களில், கடந்த ஜூன் 8ஆம் தேதி கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, டிரேஸ்டுகெதர் ரகசியக் கொள்கை குறித்து டாக்டர் விவியன் கூறியவற்றை இணையவாசிகள் சிலர் சுட்டினர்.
இதைத் தொடர்ந்து, அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் விவியன், தாம் தெளிவுறப் பேசத் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டார். "டிரேஸ்டுகெதர் தரவுகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்த பிறகு, பல இரவுகளாக நான் தூங்கவில்லை. 'சட்டத்தை மாற்றும்படி சக அமைச்சர்களை இணங்கச் செய்ய முயல வேண்டுமா?' என என்னை நானே கேட்டுக்கொண்டேன்," என்று அமைச்சர் விவியன் சொன்னார்.

