கொவிட்-19 கொள்ளைநோய் மற்றும் வேலை நிலவரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவ விரைவில் அவர்களுக்கு உளவியல் சார்ந்த உதவி வழங்கப்படும்.
குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் தங்கள் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களான அவர்கள் தனித்தனியாக ஆலோசனை சேவை பெறுவார்கள் என்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நேற்று தெரிவித்தது.
"வேலை சார்ந்த திடீர் சூழ்நிலையால் அல்லது கடுமையான கவலையால் ஊழியர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
"குறிப்பாக, பராமரிப்பாளர்கள் போன்ற சிரமமான தனிப்பட்ட பொறுப்புகளை ஏற்றிருப்போருக்கும் மிக இளைய அல்லது முதிய வயதுடைய சார்ந்திருப்போரைக் கொண்டிருப்போருக்கும் இது பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும்.
"இவ்வாண்டிலும் அதற்கு அப்பாலும் வெவ்வேறு துறைகள் வெவ்வேறு வேகத்தில் வளர்ச்சி காணும் என்பதால் இத்தகைய கவலைகள் தொடரக்கூடும்," என்றும் என்டியுசி தனது அறிக்கையில் தெரிவித்தது.
'மைண்ட் கல்ச்சர்' எனும் உளவியல் நிலையத்துடன் இணைந்து இத்திட்டத்தில் செயல்படவிருக்கும் என்டியுசி இத்திட்டம் பற்றி மேல் விவரங்கள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றது.
இந்த ஆலோசனை சேவை, 'என்டியுசி-யு கேர்' நிதித் திட்டம் ஆதரவளிக்கும் தொடர் உதவித் திட்டங்களில் ஒரு பகுதியாகும்.
"முன்பு பொருளியல் மந்தநிலையால் பாதிக்கப்பட்ட என்யுடிசி உறுப்பினர்களுக்கு உதவும் பொருட்டு, 2009ஆம் ஆண்டில் 'என்டியுசி-யு கேர்' நிதித் திட்டம் தொடங்கப்பட்டது.
"அதேபோல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலால் உருவாகியுள்ள சவால்களை எங்கள் உறுப்பினர்கள் சமாளிக்க நாங்கள் எங்கள் கடப்பாட்டை முழுமையாகத் தெரிவித்துள்ளோம்," என்றார் என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளரும் என்டியுசி பராமரிப்பு மற்றும் பரிவு பிரிவின் இயக்குநரு மான திரு ஸைனல் சப்பாரி.
கடந்த ஆண்டில் இந்நிதித் திட்டத்துக்காக கிட்டத்தட்ட 100 பேர் நன்கொடை அளித்தனர். அதையும் சேர்த்து என்டியுசி தனது குறைந்த வருமான உறுப்பினர்களின் நல்வாழ்வை மேம்படுத்த $31.5 மில்லியனை செலவழிக்க கடப்பாடு கொண்டுள்ளது.
கடந்த மாதம் 18ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 33,000 உறுப்பினர்களுக்கு $16 மில்லியன் மதிப்பிலான நிதியை வழங்கியுள்ளது. அது அவர்களின் அன்றாட செலவுகளுக்கும் பிள்ளைகளின் பள்ளி சார்ந்த செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.
இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட 'என்டியுசி கேர்' நிதி (கொவிட்-19) என்ற திட்டத்தின் மூலம் வழங்கப் பட்டது.
கொவிட்-19 சூழ்நிலையால் சம்பளம் குறைக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தலா $300 ரொக்க உதவி கொடுக்கப்பட்டது என்றும் என்டியுசி கூறியது.