ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானம் ஒன்று கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்திருப்பதாக இந்தோனீசியாவின் தேடி மீட்கும் முகவை தெரிவித்துள்ளது.
ஸ்ரீவிஜயா ஏர் ஃபிளைட் SJ182 விமானம் கிளம்பிய சற்று நேரத்துக்குள் அதனுடனான தொடர்பு அற்றுப் போனது.
FlightRadar24 தகவலின்படி அது ஒரு போயிங் 737-500 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் இரண்டு விபத்துகளில் தொடர்புடைய போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இது இல்லை.
ஜகார்த்தாவின் சொகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த விமானம் மேற்கு கலிமந்தானில் உள்ள பொன்டியானாக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.
ஒரு நிமிடத்துக்குள் சுமார் 3,000 மீட்டர் உயரத்தை அந்த விமானம் இழந்ததாக விமானங்களின் பயணத்தைக் கண்காணிக்கும் இணையத் தளமான Flightradar24.com குறிப்பிட்டது.
அந்த விமானத்தில் 59 பயணிகள் இருந்தனர். விமானத்தில் 5 சிறுவர்கள், ஒரு குழந்தை ஆகியோரும் இருந்ததாக இந்தோனீசிய ஊடகமான ரிபப்ளிகா குறிப்பிட்டது.
விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகாத நிலையில், விமானத்தின் சிதறிய பாகங்களைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
விமானம் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தேடி, மீட்கும் பணிகள் தொடர்வதாக இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.


