திருமதி தீபா ஆஷா தேவி, 37, பயிற்சி பெற்ற ஒரு தாதி. இருந்தாலும் அந்தத் தொழிலை மேற்கொள்வதற்குப் பதிலாக தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என்று தொழில் முனைப்புள்ளவரான அவர் விரும்பினார். திருமதி தீபாவுக்கு 9 வயது, 5 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவரின் கணவர் நிதித்துறைத் திட்ட வல்லுநர்.
மூத்த மகன் தொடக்கப்பள்ளிக்குச் சென்றபோது மகனின் படிப்புக்கு உதவியாக அந்தத் தாயார் முதலில் A என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய சுவடியை உருவாக்கினார். அப்போது அவருக்கு ஒரு நிலவரம் தெரியவந்தது. தமிழ் மொழியை இனிமையாக, மனதிற்குப் பிடித்த முறையில் பிள்ளைகள் கற்பதற்கான கற்றல் கருவிகள், சாதனங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதை அந்த மாது அப்போது உணர்ந்தார்.
பிறகு அவர், படத்தை, சுவடியைச் சுற்றிலும் பிளாஸ்டிக்கை பூசி அவற்றைப் பல காலம் கெடாமல் பாதுகாக்கும் சாதனத்தை (லேமினேஷன்) வாங்கி பலவற்றையும் உருவாக்கி உறவினர்களுக்கு விற்கத் தொடங்கினார். அதேபோல் கற்றல் சாதனங்களை 'கேரொசல்' என்ற இணையச் சந்தையிலும் விற்கத் தொடங்கினார். நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை அயராது பாடுபட்டார். நண்பர் ஒருவர் $30,000 கொடுத்து உதவினார். அதைக் கொண்டு திருமதி தீபா 2018ல் நவம்பர் மாதம் லிட்டில் இந்தியா ஆர்க்கெட்டில் வாடகைக்கு கடை ஒன்றை எடுத்து 'எக்கி மேஜிக் பாக்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்திய கலாசாரம், சிங்கப்பூர் அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் புதிர்ச்சுவடிகள், சுவர் ஒட்டுத்தாட்கள், கதைச் சதுரங்கள் முதலானவற்றை அவர் வடிவமைத்தார். 2018 மே மாதம் தமிழ் கற்றல் வளங்களை உருவாக்கி விற்பனை செய்யும் தொழிலை அந்த மாது தொடங்கினார். இப்படி இருக்கையில், 2019ல் அவருக்கு எதிர்பாராத வகையில் பாதகமான நிலை ஏற்பட்டது. கடும் மழை காரணமாக உருவான நீர் அவரின் கடைக்குள் புகுந்து $12,000 மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டது.
ஆனாலும் அவர் சோர்ந்துவிட வில்லை. இது ஒருபுறம் இருக்க சென்ற ஆண்டில் கொவிட்-19 காரணமாக கடையை மூடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. தன்னுடைய நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வரவழைக்கவும் அவரால் முடியவில்லை. இதன் காரணமாக திருமதி தீபா தனது தமிழ் கற்றல் வளக் கருவிகள் விற்பனையை தனது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் இருந்தபடி இணையம் வழி நடத்த முடிவு செய்துள்ளார்.
"இணையத்தில் அல்லது வீட்டில் இருந்தபடி வர்த்தகத்தில், தொழிலில் ஈடுபட இது தலைசிறந்த காலம். மக்கள் இணையம்வழி பொருட்களை வாங்குவதில் அதிக நாட்டமாக இருக்கிறார்கள்," என்று திருமதி தீபா கூறுகிறார். இவரின் தயாரிப்புப் பொருட்கள் எல்லாம் Shopify வர்த்தகத் தளத்தில் Tamilwithlove என்ற இணையக் கடையில் கிடைக்கின்றன. "தமிழை மனதுக்குப் பிடித்த ரம்மியமான ஒன்றாக ஆக்க விரும்பு கிறேன். சிறார்களைப் பொறுத்தவரை, வாரம் ஒரு முறை தமிழ் வகுப்புகளுக்குச் செல்வது ஒரு பக்கம் இருந்தாலும் எங்கும் தமிழைப் பார்க்கும் சூழ்நிலை இருந்தால் அது அவர்களைக் கவர்ந்து ஈர்த்துவிடும்," என்று கூறும் திருமதி தீபா, அடுத்த மாதம் இந்தி, பஞ்சாபி மொழி கற்றல் சாதனங்களைத் தொடங்கப்போகிறார்.
வெளிநாடுகளில் செயல்படும் கடைகளில் தன் பொருட்களை விற்பது இவரின் இலக்கு. சில வாடிக்கையாளர்கள் திருமதி தீபாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி மற்ற சிறார்களுக்கும் உதவும் வகையில் புத்தகங்களை எழுதும் அளவுக்குத் தங்களிடம் விருப்பம் மேலோங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதை நல்ல ஆக்ககரமான ஒன்றாக தான் கருதுவதாகத் திருமதி தீபா கூறினார்.

