கடலில் விழுந்த ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பெட்டிகளை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விமானத்தில் இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளிலிருந்து சமிக்ஞைகள் கிடைத்ததாகவும் அதைக் கொண்டு அவை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர். தகவல் பதிவுப் பெட்டிகள் கடலுக்கு அடியில் இருப்பதாகவும் அதை மீட்க முக்குளிப்பாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவசரநிலை ஏற்பட்டால் விமானத்தின் இருப்பிடத்தைக் காட்டும் சாதனத்திலிருந்தும் சமிக்ஞை கிடைத்துள்ளதாகக் கூறிய மீட்புப் பணிக் குழுவின் தலைவர் பாகுஸ் புருஹித்தோ, தேடுதன் மற்றும் மீட்புப் பணிகளுக்காக வானிலை சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நேற்று புறப்பட்ட போயிங் 737-500 ரக பயணிகள் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போனது. அதைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டதை அடுத்து கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பது அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தோனீசியாவுக்கு வடக்கில் இருக்கும் கடற்பகுதியில் மிகப் பெரிய பரப்பளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து விமானம் அங்கு விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதிக்குப் படகுகளில் சென்ற மீட்புப் பணியாளர்கள் கடலிலிருந்து விமானப் பாகங்களை மீட்டனர். மீட்புப் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் உதவுகின்றனர். கடலிலிருந்து உடல் பாகங்கள், விமானத்தின் சக்கரங்கள் உள்பட பல்வேறு பாகங்கள், சிறுவர்களின் ஆடைகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன. மாண்டோரின் அடையாளத்தை உறுதி செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படும். இதனை முன்னிட்டு விமானத்தில் பயணம் செய்தோரின் குடும்பத்தாரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் 62 பேர் இருந்ததாக இந்தோனீசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 12 விமானச் சிப்பந்திகளும் 50 பயணிளும் அடங்குவர். பயணிகளில் ஏழு சிறுவர்களும் மூன்று கைக்குழந்தைகளும் அடங்குவர்.
விமான விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்தாருக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். "தேடுதல், மீட்புப் பணி அமைப்புக்கு இந்தோனீசிய ஆயுதப் படையும் போலிஸ் படையும் துணை புரிகின்றன. தேடுதல், மீட்புப் பணிகளை உடனடியாக நடத்தும்படி மீட்புப் பணி அமைப்புக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்," என்று அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உடனடியாக விசாரணை நடத்தும்படி இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

