சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவின் பல மாநிலங்களில் 14 நாள்களுக்கு மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

மலேசியாவில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO2.0) விதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொவிட்-19 தொற்று கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் முகைதீன் யாசின் இன்று (ஜனவரி 11) அறிவித்தார்.

மலாக்கா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர், சாபா ஆகிய 5 மாநிலங்களிலும் கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்களிலும் 14 நாள்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நடப்புக்கு வருகிறது. அங்கு சமுதாய நடவடிக்கைகளும் கூட்டங்களும் தடை செய்யப்படுகின்றன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் பகுதிகளில் மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களுக்கு அனுமதி இல்லை. வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு. ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமே அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயணம் செய்ய அனுமதி உண்டு.

“நமது சுகாதாரப் பராமரிப்புத் துறையால் தினமும் 2,000 புதிய கொவிட்-19 சம்பவங்களைக் கையாள முடியாது,” என்று திரு முகைதீன் தனது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

“கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை 14 நாள்களுக்கு  நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார் அவர். 

வரும் புதன்கிழமை (ஜனவரி 13) முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வரும் என்றார் அவர்.

பாகாங், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு, கிளந்தான் ஆகிய மாவட்டங்களில் சற்று  தளர்த்தப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும். ஆனால், பெர்லிஸ், போர்னியோ ஆகியவற்றில் மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த செப்டம்பர் முதல் கொவிட்-19 மூன்றாம் அலையால் பாதிக்கப்பட்டு வரும் மலேசியாவில் தற்போது கிருமித்தொற்று பெருமளவு அதிகரித்து வருகிறது.

நேற்று அங்கு 2,451 பேருக்கு புதிதாக தொற்று பதிவானது; 9 உயிரிழப்புகளும் பதிவாகின. சிலாங்கூர் மாவட்டத்தில் ஆக அதிகமாக 730 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கொவிட்-19ஆல் 100க்கும் குறைவானவர்களே உயிரிழந்த நிலையில் இவ்வாண்டு தொடக்கம் முதல் 71 பேர் உயிரிழந்திருப்பது அக்கறைக்குரிய விஷயம் என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களாக சராசரியாக தினமும் சுமார் 2,000 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. ஆக அதிகமாக இம்மாதம் 7ஆம் தேதி 3,027 பேருக்கு தொற்று பதிவானது.

கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் கடந்த வார இறுதியில் மலேசியர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க பேரங்காடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். சிலர் குடும்பத்துடன் சேர்ந்து உணவகங்களில் உணவருந்துதல் போன்ற சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon