மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்; கடுமையான கொவிட்-19 நெருக்கடி நிலையால் மாமன்னர் அனுமதி

மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்; கடுமையான கொவிட்-19 நெருக்கடி நிலையால் மாமன்னர் அனுமதி

2 mins read
2373bc71-44b7-4330-8f73-d7ec9a8ce898
கொரோனா தொற்றுக்கு எதிரான போரைக் கையாள, மலேசியாவில் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா தொற்றுக்கு எதிரான போரைக் கையாள, மலேசியாவில் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் மோசமடைந்து வரும் நிலையில் கடந்த இரு மாதங்களாக அங்கு அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா பரவல் தொடங்கிய முதல் 10 மாதங்களில் நிகழ்ந்த மரணங்களைவிட இது அதிகம்.

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு மாமன்னர் அப்துல்லா அகமது ஷா செவிசாய்த்து வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை அல்லது அதற்கு முன்பாக கொவிட்-19 கட்டுக்குள் வந்தால் அப்போது வரை நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அரண்மனை செய்தி இன்று (ஜனவரி 12) தெரிவித்தது.

"கொரோனா கிருமிப் பரவல் நாட்டில் மிக நெருக்கடியான நிலையில் இருப்பதாக மாமன்னர் கருதுவதால் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்துவது அவசியமாகிறது," என அரண்மனை தலைமை அதிகாரி அகமது ஃபாடில் ஷம்சுதின் செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.

மன்னர் கடந்த அக்டோபர் மாதத்தில் நிராகரித்த அவசரநிலை பிரகடனம் பற்றிய முன்மொழிவை நேற்று அமைச்சரவை கூடி மறு ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அக்டோபருடன் ஒப்பிடுகையில் நாட்டில் நிலைமை தற்போது மாறியுள்ளது.

மருத்துவமனைகளின் படுக்கைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் நிரம்பி வழிகின்றன. பாகாங்கின் மன்னர் அப்துல்லா மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினின் நிர்வாகத்துக்கு அவசரகால அதிகாரத்துக்கு அனுமதி அளித்தார்.

இரு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சுகாதார நிபுணர்களையும் கொண்ட தற்சார்பு குழு ஒன்றை அரசாங்கம் அமைக்கும் என்றும் அவசரநிலையை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பிருந்தால் அந்தக் குழு அதனைப் பரிந்துரைக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 2,000 பேருக்கு புதிதாக கொவிட்-19 பாதிப்பு பதிவாகிறது. ஆக அதிகமாக ஜனவரி 7ஆம் தேதி 3,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பதிவானது. தற்போது 28,554 பேர் கொவிட்-19க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தும் நிலையங்களிலும் சுமார் 100 படுக்கைகள் மட்டுமே கொவிட்-19 நோயாளிகளுக்காக எஞ்சியுள்ளது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான செலவுகளுக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி, அரசாங்கம் அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் 5 மாநிலங்களிலும் 3 கூட்டரசு பிரதேசங்களிலும் நேற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்