இத்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அதனை கொரோனா தொற்றின் முடிவிற்கான தொடக்கமாகக் குறிப்பிடலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
காணொளிக் காட்சி மூலம் தடுப்பூசி நடவடிக்கையைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதற்கட்டமாக சுகாதார, முன்களப் பணியாளர்கள் என ஜூலை மாதத்திற்குள் 30 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இரண்டாம் கட்டத்தின்போது அந்த எண்ணிக்கை 300 மில்லியனாக அதிகரிக்கும் என்று அவர் சொன்னார்.
சீரம் நிறுவனத்தின் 'கொவிஷீல்டு', பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கொவேக்சின்' ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.
இருமுறை போடப்பட வேண்டிய அத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
"கொரோனா பரவலுக்கு எதிரான போரில் தடுப்பூசி நமது வெற்றியை உறுதிப்படுத்தும். இவ்விரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்," என்றார் அவர்.
தடுப்பூசி வந்துவிட்டாலும், முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் பொதுமக்கள் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதல் நாளான நேற்று நாடு முழுவதுமுள்ள 3,006 கொரோனா தடுப்பூசி மையங்களிலும் தலா நூறு பேர் என, 300,000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளராக இருக்கும் மணீஷ் குமார் என்பவர் இந்தியாவிலேயே முதலாவது ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த நிகழ்வின்போது உடன் இருந்த சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், "கொரோனாவிற்கு எதிரான போரில் இவ்விரு தடுப்பூசிகளும் நமக்குக் கிடைத்த சஞ்சீவி மருந்துகள்," எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தடுப்பூசி நடவடிக்கையை நேற்று தொடங்கி வைத்தார்.
"தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், நானும் போட்டுக்கொள்வேன்," என்று முதல்வர் பழனிசாமி சொன்னார்.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதுவரை 489,000 முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, தனது தயாரிப்பான 'கொவேக்சின்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டபின் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டு, அவை தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் ஏற்பட்டன என நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

