கட்டுமான துறையைத் தாங்கிப் பிடிக்க முயலும் அரசாங்க குத்தகைகள்

கட்டுமான துறையைத் தாங்கிப் பிடிக்க முயலும் அரசாங்க குத்தகைகள்

2 mins read
3361165f-b616-4103-9edd-90edd96581fb
-

கட்டட, கட்டுமானத் துறையில் ஒப்பந்தங்களின் மதிப்பு இவ்வாண்டு 23 பில்லியன் வெள்ளிக்கும் 28 பில்லியன் வெள்ளிக்கும் இடையே அதிகரிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று தெரிவித்தார். ஆயினும் தனியார் துறையில் வளர்ச்சி, கொவிட்-19க்கு முந்திய சூழலின்போது இருந்த அளவுக்கு உயரும் வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறினார்.

ஒட்டுமெத்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து 25 பில்லியன் வெள்ளிக்கும் 32 பில்லியன் வெள்ளிக்கும் இடைப்பட்டிருக்கும் என்று திரு லீ, கட்டட, கட்டுமான ஆணையமும் சிங்கப்பூர் நிலச்சொத்து மேம்பாட்டாளர் சங்கமும் ஏற்பாடு செய்துள்ள பயிலரங்கு ஒன்றில் தெரிவித்தார். ஒட்டுமொத்த வளர்ச்சியில் பொதுத்துறை 65 விழுக்காடு பங்களிக்கும் என்று திரு லீ கூறினார்.

ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்கு ரயில் பாதை, ஆழ்துளை சுரங்க கழிவுத்தொட்டி அமைப்பு உள்ளிட்ட பெருந்திட்டங்களும் ஆறு மில்லியன் வெள்ளி மதிப்பிலான சைக்கிள் பாதை, பூங்காக்கள், பொது இட வசதிகளின் புதுப்பிப்புகளும் இந்த வளர்ச்சிக்குப் பங்காற்றவுள்ளன.

இந்த முன்னுரைப்பில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையமும் இரண்டு ஒருங்கிணைந்த உல்லாச விடுதிகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை. தற்போதைய நிச்சயமற்ற சூழலால் இந்தக் கட்டுமானத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இது, கடந்தாண்டு குத்தகைகளின் ஒட்டுமொத்த மதிப்பான 21.3 பில்லியன் வெள்ளியைக் காட்டிலும் அதிகம். கடந்தாண்டு சிங்கப்பூரில் தொடங்கிய கொவிட்-19 கிருமிப்பரவலின் காரணமாக ஏற்பட்ட தடங்கல்களாலும் நிச்சயமின்மையாலும் இந்த எண்ணிக்கை, முன்னுரைப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் 10 பில்லியன் வெள்ளி குறைவாக உள்ளது.