கம்போங் அட்மிரல்டி குடியிருப்புப் பகுதிக்குப் பக்கத்தில் உள்ள சாலையின் ஒரு பகுதி அடுத்த மாதத்தில் இருந்து தற்காலிகமாக மூடப்படும். இதனால் கார்களும் தனியார் வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாது.
சாலை தடங்களை நடைபாதைகள், சைக்கிள் பாதைகளாக மாற்றும் முன்னோட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
உட்லண்ட்ஸ் டிரைவ் 63க்கும் டிரைவ் 71க்கும் இடையில் உள்ள உட்லண்ட்ஸ் ரிங் சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் நிரம்பிய தடுப்புகள் அமைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.
இதனால் மேற்கு நோக்கிச் செல்லும் சாலை தடம் போக்குவரத்துக்கு மூடப்படும். கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை தடம், பொதுப் பேருந்துகளும் அவசர வாகனங்களும் மட்டும் செல்ல மாற்றி அமைக்கப்படும்.
இந்த ஏற்பாட்டின் மூலம் குடியிருப்பாளர்களும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களும் நடந்து செல்வதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் கூடுதல் இடம் ஒதுக்கப்படும் என்று ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
"கம்போங் அட்மிரல்டி, அட்மிரல்டி எம்ஆர்டி நிலையம், இதர இடங்களுக்குப் பாதசாரிகள் செல்ல கூடுதல் சௌகரியத்தை இது ஏற்படுத்தித் தரும்," என்று ஆணையம் விவரித்தது.
இந்த ஏற்பாடு குறித்து சமூகத்தினரிடம் இருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் தான் கேட்டறிய இருப்பதாகக் கூறிய ஆணையம், இதற்குப் பொதுமக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே சாலை அமைப்பில் தற்காலிகமாக செய்யப்படும் மாற்றங்கள் நிரந்தரமாக்கப்படும் என்று சொன்னது.
இந்த மாற்றம் குறித்து இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், கம்போங் அட்மிரல்டி பகுதியில் பாதசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார்.
உட்லண்ட்ஸ், செம்பவாங் குடியிருப்பாளர்களிடையே இப்பகுதி பிரபலமாக உள்ளதை அவர் சுட்டினார்.
உட்லண்ட்ஸ் ரிங் சாலையின் ஒரு பகுதியை நடைபாதையாக மாற்றுவதால் பாதசாரிகள் நடப்பதற்கு சௌகரித்தை ஏற்படுத்தித் தரும் என்று சொன்ன திரு ஓங், இதுபோன்ற கூடுதலான திட்டங்கள் நடப்புக்கு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.
சாலை தடங்களை நடைபாதைகளாக மாற்றியமைப்பதற்குப் பொருத்தமான இடங்களைத் தான் ஆராய்ந்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

