கொவிட்-19: அச்சம், கவலை சூழலில் வேலைபார்க்கும் கடல் துறை முன்களப் பணியாளர்கள்

கொவிட்-19: அச்சம், கவலை சூழலில் வேலைபார்க்கும் கடல் துறை முன்களப் பணியாளர்கள்

3 mins read
36f0d320-5551-42f8-8901-092197b86958
-

உலக வர்த்தகத்தில் 80%க்கும் அதிகம் கடல் வழியாக நடக்கிறது. ஆகையால் சிங்கப்பூருக்குத் தேவையான, அத்தியாவசியபொருட்கள் வருவதையும் இங்கிருந்து செல்வதையும் உறுதிப்படுத்துவதில் கடல்துறை மிக முக்கிய பங்காற்றுகிறது.

இந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அன்றாடம் பல நாடுகளில் இருந்து வருகின்ற கப்பல்களுடன் நேரடி தொடர்புகொண்டு பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் இப்போதைய கொவிட்-19 காலத்தில் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற கப்பல்களைச் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து கிருமி தொற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

அண்மைய மாதங்களில் இந்தத்துறை ஊழியர்கள் ஐந்து பேருக்குத் தொற்று தெரியவந்துள்ளதாக கடல்துறை துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் கடல் சேவைத் துறைப் பொறியாளர், இரண்டு துறைமுக மாலுமிகள், கப்பல் சரக்கு அதிகாரி, கடல்துறை ஆய்வாளர் ஆகியோர் அடங்குவர்.

இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு சிங்கப்பூரின் கடல் துறை முன்களப் பணியாளர்களுக்கு அரசாங்கம் தனது தேசிய தடுப்பூசி இயக்கத்தில் முன்னுரிமை அளித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு ஜனவரி 13 முதல் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. ஜனவரி 21 ஆம் தேதி வாக்கில் 4,600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த மாத முடிவுக்குள் 10,000 பேருக்கும் அதிக ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது.

சிங்கப்பூருக்கு வருகின்ற கப்பல்களைக் கரைக்குப் பாதுகாப்பாக வழிகாட்டி கொண்டுவருவது, கொள்கலன்களை இழுத்துக் கட்டி அவற்றைப் பத்திரப்படுத்துவது; பிறகு அவற்றை அவிழ்த்து இறக்க, ஏற்ற வகை செய்வது; கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது; கப்பல்களில் ஆய்வுகளை நடத்தி அவை பயணத்திற்குத் தகுதியுடன் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வது முதலான பல பணிகளை இந்த ஊழியர்கள் பல கப்பல்களுக்கும் சென்று செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட கடல் துறை முன்களப் பணியாளர்களில் சரவணன் சந்திரேசேனனும் ஒருவர். இவர் கொள்கலன்களைக் கையாளும் வல்லுநராக பணியாற்றுகிறார். கப்பல்களுக்கு நன்னீரைக் கொண்டு சேர்ப்பதும் இவரின் பணியில் அடங்கும்.

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் கொள்கலன் கையாளும் நடவடிக்கைகளுக்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இவர், தொடக்கத்தில் தனது குழுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சி இருந்ததாகவும் ஆனால் சார்ஸ், காற்றுத் தூய்மைக்கேடு போன்றவற்றின் விளைவாக பல ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ள பல பாதுகாப்புச் சாதனங்களையும் நடைமுறைகளையும் சார்ந்து தாங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேற்பார்வை பணி என்பதால் இவர் இப்போது வாரம் இரண்டு தடவை மட்டும் கப்பல்களுக்குச் செல்கிறார். முன்பு அன்றாடம் இவர் அந்தப் பணியைச் செய்துவந்தார்.

துறைமுக முனையத்திற்குள் ஊழியர்கள் 10 பேருக்குப் பதிலாக நான்கு பேர் குழுவாக கலன்களில் செல்கிறார்கள். ஒவ்வொரு 12 மணி வேலை நேரத்திலும் சுமார் 100 ஊழியர்கள் இருப்பார்கள் என்பதால் நான்கு நான்கு பேராகச் செல்வது என்பது போக்குவரத்து ஏற்பாடுகளில் சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

"எல்லாம் கடற்பாலம் வழியாக அல்லது விமானத்தில் வருவதில்லை என்பது முன்னிலும் அதிகமான மக்களுக்கு இப்போது தெரியும். இது முக்கியமானது," என்றும் திரு சரவணன் கூறினார்.

கொவிட்-19 சூழலில் முன்களப் பணியாளர்கள் என்றால் தன்னைப் போன்ற கடல்துறை ஊழியர்களை உடனே மக்கள் நினைக்கமாட்டார்கள் என்றும் மருத்துவர்களும் பராமரிப்பு ஊழியர்களும்தான் அவர்கள் நினைவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறினார். மருத்துவர்களும் பராமரிப்பு ஊழியர்களும் மக்களுடன் அணுக்க தொடர்புள்ளவர்கள் என்பதே காரணம் என்று அவர் விளக்கினார்.

கடல்துறை முன்களப் பணியாளர்களைப் பாதுகாக்க தடுப்பூசி, வழக்கமான பரிசோதனைகள் மூலம் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளனர். இதர பல பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்படுகின்றன