தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்துமலை தைப்பூச வெள்ளி ரத ஊர்வலம்: 10 பேருக்கு மட்டுமே அனுமதி

2 mins read
317c9781-ca65-469c-8142-f06548f0cabb
தைப்பூச திருவிழாவையொட்டி முருகனை ஏந்திச் செல்லும் வெள்ளி ரத ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டின் ரத ஊர்வலம் பொலிவின்றி நடைபெறவிருக்கிறது. படம்: தி ஸ்டார் -

கோலாலாம்பூரில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சாமி கோயிலின் தைப்பூச வரலாற்றில் முதல் முறையாக வெள்ளி ரத ஊர்வலத்தில் பத்து பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 காரணமாக ரத ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரத ஊர்வலத்தில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சுமார் 16 மணி நேரத்துக்கு கோலாலம்பூர் வீதிகளில் ரதம் வலம் வரும்.

ஆனால் இம்முறை ரத ஊர்வலம் எந்த இடத்திலும் நிற்காமல் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆலய நிர்வாகக் குழுவின் தலைவரான ஆர். நடராஜா, 7.3 மீட்டர் உயரம் கொண்ட ரத ஊர்வலத்தில் பத்து பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்றார்.

ஓட்டுநர், மின்சாரப் பொறியாளர், மின்விளக்கு நிபுணர், கோயில் அர்ச்சகர், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகிய பத்து பேர் உடன் செல்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் நாளை பூசைகள் முடிந்தபிறகு அதிகாலை 2.30 மணியளவில் வெள்ளி ரதம் புறப்படும். இதே நாள் காலை 5.30 அல்லது 6.00 மணியளவில் பத்துமலையில் ஊர்வலம் நிறைவடையும்.

மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்துக்கு ரதம் திரும்பிவிடும்.

வெள்ளி ரத ஊர்வலத்தின்போது பாரம்பரிய இசை எதுவும் இருக்காது என்று கூறிய அவர், போலிசாரின் கடுமையான மேற்பார்வையில் ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார்.

ஊர்வலத்தில் பங்கேற்க வர வேண்டாம் என்றும் கிருமிப்பரவல் காரணமாக ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச நாளன்று கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் அன்னுவர் மூசா, இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் ரத ஊர்வலத்துக்கு மட்டுேம அனுமதியுண்டு என்று கூறியிருந்தார். இதையொட்டி ரத ஊர்வலம் மட்டுமே இவ்வாண்டு நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்