வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த சுமார் 620 பேர் நேற்று சிங்கப்பூர் ராட்டினத்துக்குச் சென்று அதை அனுபவித்து மகிழ்ந்தனர்.
'இட்ஸ் ரெயினிங்ரெயின் கோட்ஸ்' (ஐஆர்ஆர்) என்ற லாபநோக்கற்ற அமைப்பும் லுக், சிங்கப்பூர் ஃபிளையர் ஆகிய அமைப்பு களும் சேர்ந்து இந்த மகிழ் உலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
உள்ளூர் மக்கள் நன்கொடையாக வழங்கி இருந்த 'சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுகளைப்' பயன்படுத்தி இந்தப் பயணத்திற்குரிய கட்டணத்தை ஐஆர்ஆர் அமைப்பு செலுத்தியது.
ராட்டினத்தை அதன் உள்ளே சென்று பார்வையிட்ட ஊழியர்களில் ஒருவரான எம்.வி. மாறன், 30, என்ற கட்டுமானத் துறை ஊழியர், தான் செங்காங்கில் அடுக்குமாடி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்து ராட்டினத்தைப் பார்த்து வியந்ததாகத் தெரிவித்தார். இப்போது அந்த ராட்டினத்தில் இருந்து செங்காங் கட்டுமான இடத்தைப் பார்ப்பது தனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாக அவர் கூறினார்.
இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். ராட்டினத்தில் எட்டு பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த மகிழ்உலா முடிந்ததற்குப் பிறகு பலரும் தாங்கள் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டனர். தங்கள் நாடுகளில் உள்ளோரிடம் பேசி மகிழ்ந்தனர்.
கொவிட்-19 காரணமாக விடுதி களிலேயே முடங்கிக் கிடந்துவிட்டு முதன்முதலாக ஒரு சமூக இடத்திற்குச் சென்ற அனுபவம் சில ஊழியர்களுக்குக் கிடைத்தது.
யாருமே வெளியில் வரமாட்டார்கள் என்பதால் விடுதிகளிலேயே அடைந்து கிடப்பது சில நேரங்களில் பெரும் மனஉளைச்சலாகிவிடும் என்று தெரிவித்த திரு சரவணன், 39, என்ற மற்றொரு கட்டுமானத் துறை ஊழியர், இந்த வாய்ப்பை தங்களுக்கு வழங்கிய சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், தன் நிறுவனம் ஆகிய வற்றுக்கும் நன்றி கூறினார்.
நேற்றைய நிலவரப்படி 7,178 பற்றுச்சீட்டுகளை வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்தி இருந்தனர். அவற்றில் 4,307 சீட்டுகள் பொதுமக்கள் நன்கொடையாக அளித்தவை. 2,871 சீட்டுகள் நிறுவனங்கள் அளித்தவை. இத்திட்டத்தை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் வரவேற்றார்.
ஐஆர்ஆர் நிறுவனரான திருவாட்டி தீபா சுவாமிநாதன், தாங்கள் அமைச்சுடனும் இதர பங்காளிகளுடனும் சேர்ந்து பாதுகாப்பு இடைவெளி போன்ற நிபந்தனைகளை முழுமையாக கடைப்பிடிப்பதால் மேலும் பல முதலாளிகள் ஊழியர்களை அனுமதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 30 வரை https://www.klook.com/en-US/activity/53385-singapore-flyer/ என்ற முகவரியில் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கவரும் இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

