மியன்மார் ராணுவம் இணையத் தொடர்பை முடக்கியது

மியன்மார் ராணுவம் இணையத் தொடர்பை முடக்கியது

1 mins read
bed52868-71cd-439b-91b0-06ec2f53ab74
-

யங்கூன்: இந்த வாரம் மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை எதிர்த்தும் கைது செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூச்சியின் விடுதலைக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று வீதிகளில் போராட்டம் நடத்திய நிலையில் ராணுவத்தினர் இணையத் தொடர்புகளைத் துண்டித்தனர்.

ராணுவத் தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றியபின் நடந்த முதல் போராட்டத்தில், சர்வாதிகாரம் முறியவேண்டும் என்றும் ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும் என்றும் மக்கள் சத்தம் எழுப்பியது மட்டுமல்லாமல் பதாகைகளையும் ஏந்தினர். வீதிகளில் இருந்த பார்வையாளர்கள் அவர்களுக்கு உணவும் பானமும் வழங்கினர்.

கூட்டத்தில் இருந்த பலரும் சிவப்பு உடையணிந்தனர். நவம்பர் 8ஆம் தேதி பெருவாரியான வெற்றி அடைந்த திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் நிறமானது சிவப்பு.

அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராணுவத் தலைவர்கள் கூறியதுடன் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தனர்.

போராட்டங்கள் பெரிய அளவில் விரிவடைந்த நிலையில் சமூக ஊடகங்களில் இன்னும் மக்களை வந்து ஈடுபடுமாறு எழுப்பப்பட்ட செய்திகள் பரப்பப்பட்ட தருணத்தில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

திறன்பேசி இணையச் சேவைகளும் 'வைஃபை' தொடர்புகளும் ரத்தானதை பலர் குறிப்பிட்டனர்.