உத் தர காண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் உள்ள பனிமலை ஒன்று
நேற்று திடீரென உடைந்தது. அப்பகுதியில் உள்ள மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகின. இதனால் தவுலிகங்கா எனும் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் அங்கு வசித்த, பணிபுரிந்த 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதாக உத்தரகாண்ட் மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.அருகிலிருந்த மின்நிலையத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தவர்களும் அப்பகுதி கிராம மக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட சஞ்சே சிங் ரானா என்பவர் தொலைபேசிவழி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதையடுத்து ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி சாமோலி மாவட்ட போலிஸ் அறிவுறுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு 600 ராணுவ வீரர்கள் விரைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது. நேற்று மாலை நிலவரப்படி பத்துக்கும் மேற்பட்டவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்குச் சென்ற உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அங்கு நிலவரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் நேற்று பதிவிட்ட திரு ராவத், "சாமோலி மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. களத்தின் நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
"ஆற்றின் நீர்மட்டம் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் அதிகமாக இருந்தாலும் அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.

