தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் 21 அமைதித் தூதர்கள்: அதிபர் ஹலிமா நியமித்தார்

2 mins read
06c27b32-49ce-4c29-9e12-8a6028fcf9d0
-

சிங்கப்பூரில் பல்வேறு சமய சமூகங்களுக்கு இடையில் நல்லுறவு, நல்லிணக்கப் பாலத்தைப் பலப்படுத்துவதற்காக புதிதாக 21 அமைதித் தூதர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அடித்தள நிலையில் அமைதியைப் பலப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இளைஞர்கள் தலைமை தாங்கி வழிநடத்தும் 'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற சமயங்களுக்கு இடையிலான அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சி இன்று அமரா சிங்கப்பூர் ஹோட்டலில் நடந்தது.

அதில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டு புதிய அமைதித் தூதர்களை நியமித்தார். 19 முதல் 36 வரை வயதுள்ள அந்தப் புதிய தூதர்கள், ஓராண்டு காலம் நல்லிணக்கப் பணியாற்றுவார்கள். அவர்கள் இத்தகைய நியமனம் பெற்றுள்ள 3வது அணியினர்.

இந்த ஆண்டு முழுவதற்கும் மின்னிலக்க ஊடகத்திலும் பொது உரை நிகழ்த்தவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் இளையரிடையே பல சமய, பல கலாசார விவாதிப்புகளைச் சிறந்த முறையில் நடத்த முடியும்.

இன, சமய விவகாரங்கள் பற்றி பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மூலம் ஒளிவுமறைவின்றி இளையர்கள் விவாதிக்கத் தோதாக பாதுகாப்பான ஏற்பாடுகளைத் தோற்றுவித்துள்ள 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்பை அதிபர் பாராட்டினார்.

இந்த அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. பல்வேறு சமய நம்பிக்கைகளையும் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட இளம் தொண்டூழியர்களை ஈடுபடுத்தி இருக்கும் இந்த அமைப்பு, 50,000க்கும் அதிக அமைதி ரோஜாக்களை விநியோகித்து இருக்கிறது.

சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் ஏற்படக்கூடிய புதிய மிரட்டல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்கும் அரசாங்க முயற்சிகளுக்கு உறுதுணையாக அடித்தள நிலையில் இத்தகைய மேலும் பல முயற்சிகள் தேவை என்றும் அதிபர் தெரிவித்தார். நல்லிணக்கத்தை, பிணைப்பைப் பலப்படுத்த இப்போது இடம்பெறும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றாலும் விவாதிப்புகளை இன்னும் ஆழப்படுத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.

தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொண்ட 16 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டது பற்றி கருத்து கூறிய அதிபர், நாம் விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்பதையே அது நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்கள், 'உங்களின் உண்மையுள்ள' என்ற தலைப்பிலான அனைத்து சமயங்களுக்கு இடைப்பட்ட கலந்துரையாடல் தொடர் ஒன்றில் கலந்துகொண்டனர். அந்தத் தொடரை மூத்த சமயத் தலைவர்கள் நடத்துகிறார்கள். அனைத்து சமயங்களுக்கு இடையில் அமைதியையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தக்கூடிய ஓர் அமைதி திட்டத்தைப் பற்றி அவர்கள் வரும் ஜூன் மாதம் இரண்டு வார காலம் விவாதிப்பார்கள்.

அந்தத் திட்டம் இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் அமல்படுத்தப்படும் என்று ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத், 32, தெரிவித்தார்.