ராணுவ ஆட்சியை எதிர்த்தால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடும்: ராணுவம் எச்சரிக்கை

மியன்மாரில் ராணுவ ஆட்சியை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்த்தால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது. இருப்பினும், அதன் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பல நகரங்களில் இன்று வீதிகளில் திரண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இன்று வர்த்தகங்கள் தங்களது கதவுகளை மூடின.

இம்மாதம் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் மாது ஒருவரது தலையில் போலிசார் சுட்டத்தில் அவர் உயிரிழந்தார். நேற்று தலைநகர் நேப்பிடோவில் நடைபெற்ற அந்த மாதின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடந்த சனிக்கிழமை மாண்டலே நகரில் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மேலும் இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவத்தினர் கையாளும் விதம் குறித்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இம்மாதம் 1ஆம் தேதி ஆட்சியைக் கைப்பற்றி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையிலும், மக்களின் அன்றாட போராட்டங்களைத் தடுத்து நிறுத்த ராணுவம் தவறிவிட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடுவதை நிறுத்த வேண்டும் என அரசாங்க ஊடகமான எம்ஆர்டிவி இன்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அமைதியான முறையில் சமரசம் எட்டப்படுவதற்கான சாத்தியம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக எழுத்தாளரும் வரலாற்று நிபுணருமான திரு தாண்ட் மியிண்ட் யூ கூறினார்.

“எதிர்வரும் வாரங்களில் மியன்மாரின் எதிர்காலத்தை இரு விஷயங்கள் தீர்மானிக்கும். முதலாவது, இதற்கு முந்தைய ஆர்ப்பாட்டங்களை அடக்கிய ராணுவத்தின் உறுதி. இரண்டாவது, ஆர்ப்பாட்டக்காரர்களின் தைரியம், திறன், வைராக்கியம்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.

மியன்மாரில் இயங்கிவரும் உள்ளூர், வெளிநாட்டுக் கடைகளும் தங்களது கடைகளை மூடுவதாக அறிவித்தன. ஃபுட்பாண்டா, கிராப் நிறுவனங்கள் தங்களது உணவு விநியோகச் சேவையை நிறுத்தின.

அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருவதாக மியன்மார் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. உள்நாட்டு விவகாரத்தில்   தலையிட வேண்டாம் என மற்ற நாடுகளிடம் கூறியது.

இதற்கிடையே, ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்ப்போரை வன்முறையைக் கொண்டு அடக்கும் ராணுவத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon