பணிப்பெண் துன்புறுத்தல் இனி நிகழாமல் தடுக்க அரசாங்கம் உறுதி; மூன்று அம்சங்கள் மறுஆய்வு

மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண் பியாங் கெய் டோன் துன்புறுத்தப்பட்டதைப் போல இனியொரு சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் மூன்று முக்கிய அம்சங்களை மறுஆய்வு செய்து வருகிறது.

துன்புறுத்தும் முதலாளிகளிடம் இருந்து பாதுகாத்தல், மருத்துவர்களுக்கான அறிக்கைத் தாக்கல் முறை, சமூக, பங்காளி நிறுவனங்களின் ஈடுபாடு ஆகியவையே அம்மூன்று அம்சங்கள் என மெய்நிகர் வழியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் துன்புறுத்தலுக்கு இடமில்லை,” என்று திட்டவட்டமாகக் கூறினார் அமைச்சர் டியோ.

இங்குள்ள வெளிநாட்டுப் பணிப்பெண்கள் அனைவரது பாதுகாப்பையும் அரசாங்கம் மிகத் தீவிரமாகக் கையாள உள்ளது என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி டியோ சொன்னார்.

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்காக ஏற்கெனவே பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்து வந்தாலும் ஒரு சமூகமாக சிங்கப்பூர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள உதவுவதற்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கும் வெளிநாட்டுப் பணிப்பெண்களை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்கள் செய்துள்ள தியாகங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எந்த வகையிலேனும் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் அமைச்சர்.

கடந்த 2016 ஜூலை 26ஆம் தேதி இறந்துபோன திருவாட்டி பியாங்கிற்கு அப்போது வயது 24. கடந்த 2015 மே 28ஆம் தேதி பணிக்குச் சேர்ந்தபோது 38 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, உயிரிழந்த நாளில் 24 கிலோவாகக் குறைந்துவிட்டது.

அவரைப் பட்டினி போட்டு, கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிரிழக்கச் செய்ததை அவரது முதலாளி 40 வயது காயத்ரி முருகையனும் அவரது கணவர் 41 வயது கெல்வின் செல்வமும் ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, போலிஸ் அதிகாரியான செல்வம் 2016 ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

காயத்ரி, அவரின் தாயார், செல்வம் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் இன்னும் இடம்பெற்று வருகின்றன.

தமது பணிக்காலத்தின்போது பியாங் இருமுறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டதாகவும் அவரை வேலைக்கு அமர்த்திய முகவை இருமுறை பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அவர் துன்புற்றது குறித்து எதுவும் தெரியவில்லை.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் மீது அல்லது காயத்ரி - செல்வம் தம்பதியுடன் வசித்த வேறு இரு வாடகைதாரர்கள் மற்றும் காயத்ரியின் தாயார் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்திடம் கேட்கப்பட்டது.

அந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் இருப்பதால் அதுகுறித்து கருத்துரைப்பது கடினம் என்று அமைச்சர் சண்முகம் சொன்னார்.

ஆயினும், செல்வத்தின் மீதான குற்றவியல் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதாவது வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும்கூட, துறைரீதியாக போலிசின் ஒழுங்கு நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்வார் என்று திரு சண்முகம் கூறினார்.

திருவாட்டி பியாங்கிற்கு இழைக்கப்பட்டது ‘தீங்கு’ என்று அவர் குறிப்பிட்டார்.

“தீங்கு நேராமல் தடுக்க எந்த ஒரு சமூகத்திலும் இரு தூண்கள் உள்ளன. ஒன்று, கல்வி. இரண்டு சட்டப்படியான ஆட்சி. விதிகள் மீறப்படும்போது சட்டம் தன் முழு பலத்தையும் காட்ட வேண்டியிருக்கும்,” என்றார் திரு சண்முகம்.

“போலிஸ் அதிகாரி, அரசாங்க ஊழியர், அல்லது சாதாரண மனிதன் எனப் பாகுபாடு காட்டாத ஓர் அமைப்பை நாம் கொண்டுள்ளோம். விசாரணையில் குற்றம் சாட்டப்பட வேண்டும் எனத் தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவார்,” என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!