மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மியிங்யான் நகரில் பதின்மவயது இளைஞன் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மொனிவா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் மாண்டதாக மியன்மார் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
குறைந்தது 30 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் இன்னும் சுயநினைவின்றி இருப்பதாகவும் மியன்மார் ஊடகம் தெரிவித்தது.
மண்டலே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஒருவர் நெஞ்சில் சுடப்பட்டதாகவும் மற்றொருவர் தலையில் சுடப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
யங்கூனில் போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மியன்மாரின் மக்களை வன்முறை பயன்படுத்தி அடக்கக்கூடாது என்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் போப்பாண்டவர் இன்று தெரிவித்தார்.


