ஆறு முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை மரங்கள் பரிசோதனை

ஆறு முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை மரங்கள் பரிசோதனை

1 mins read
be8d7de4-ee48-493b-ab5b-4a4770120786
மக்கள் நடமாட்டம் அல்லது வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள மரங்கள் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் ஆறு முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய பூங்காக் கழகம் மரங்களைப் பரிசோதித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அல்லது வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள மரங்கள் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் மரங்களைப் பரிசோதிக்கும் முறை, மரவேளாண்மை அனைத்துலகச் சங்கம் வெளியிட்டுள்ள தலைசிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் அவர் கூறினார்.

"ஒரு மரத்தின் சுகாதாரம், நிலைத்தன்மையை மதிப்பிடும்போது மரத்தின் உச்சி, கிளைகள், அடிமரம், வேர் ஆகியவற்றை தேசிய பூங்காக் கழக ஊழியர்கள் முழுமையாகப் பரிசோதிப்பார்கள். மரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் அது கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மரத்தின் உட்புறத்தை மதிப்பிடுவதற்கான சாதனங்கள் பயன்படுத்தப்படும்," என்று அமைச்சர் லீ விவரித்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் முதல், 4 மீட்டருக்கு மேல் சுற்றளவைக் கொண்ட மரங்கள் ஆண்டுதோறும் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், மாறிவரும் வானிலை நிலவரத்திற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் கூடுதல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகச் சொன்னார்.

மார்சிலிங் பூங்காவில் கடந்த மாதம் 20 மீட்டர் உயர மரம் ஒன்று விழுந்ததில் மாது ஒருவர் உயிரிழந்தார்.

அதையடுத்து தேசிய பூங்காக் கழகம் மரங்களைப் பரிசோதிக்கும் முறை குறித்து மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உறுப்பினர் ஹெனி சோ, ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் ஷான் ஹுவாங் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அமைச்சர் லீ இந்த விவரங்களைப் பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்