மாணவர்களின் கல்வித் தொடக்கம் எப்படி இருப்பினும் அவர்கள் கல்விப் பயணத்தின் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் காண தொடர்ந்து உதவும் முயற்சிகளை சிங்கப்பூர் தொடர்்ந்து மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வேலைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த தொழில்நுட்பக் கல்வி, பலதுறைதொழில்நுட்பக் கல்விப் பாதைகளை மறுஆய்வு செய்வதுடன் தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகள் தங்களை மேம்படுத்தும் வழிகளை கல்வி அமைச்சு ஆராயும்.
சமூக, நடத்தை சிக்கல்களைக் கொண்ட தொடக்கநிலை 1 மாணவர்களுக்கு உதவும் திட்டம் உள்ளது.
கல்வி அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அமைச்சின் திட்டங்களை விவரித்தார்.
மாணவர்களின் கல்வித் தொடக்கம் எப்படி இருந்தாலும் அவர்களை ஏட்டுக்கல்விக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பெற்றவர்களாக உருவாக்குவதும் அவர்கள் தங்களது முழுத்திறனையும் பெற்று விளங்கச் செய்வதுமே வரும் ஆண்டுகளில் அமைச்சின் முன்னுரிமைகளாக இருக்கும். ஏட்டுக் கல்வித் தேர்வு முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை மறுஆய்வு செய்வதற்கும் பள்ளிகளில் நீக்குப்போக்கான நடைமுறையை அதிகரிப்பதற்கும் அமைச்சு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது என்றார் திரு வோங்.
இந்த முயற்சிகளின் மூலம், உயர்நிலைக்குப் பிந்தைய கல்விப் பாதைகளை அமைச்சு மறுஆய்வு செய்து வருகிறது என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட பட்டயப் படிப்பைத் தீர்மானிப்பதற்கு முன்னர் மாணவர்கள் தங்கள் ஆற்றலைக் கண்டறிய பொது நுழைவுத் திட்டங்களை பலதுறைதொழில்நுட்பக் கல்லூரிகள் விரிவுபடுத்துகின்றன.
முதல் கலைப் பல்கலைக்கழகம்
உயர்கல்வித் துறையில் கலைகள் தொடர்பான கல்வியை வலுப்படுத்தும் வகையில், நன்யாங் நுண்கலைக் கழகம், லாசால் கலைக்கல்லூரி ஆகியவற்றின் இணைப்பில் முதல் கலைப் பல்கலைக்கழகம் அமையும் என்று அமைச்சர் லாரன்ஸ் அறிவித்தார்.
அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
அதன் கட்டமைப்பை உருவாக்க, செயற்குழு ஒன்றைக் கல்வி அமைச்சு நியமிக்கும்.
இது தனியார் பல்கலைக்கழகமாக இருக்கும். ஆனால் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும். லசால், நாஃபா இரண்டும் தங்கள் சொந்த பாடத் திட்டங்களை வழங்கும். தனித்தன்மையான அடையாளங்களுடன் தனித்துவமான கல்லூரிகளாகவே இவை திகழும் என்றார் அமைச்சர்.
சமூக முன்னேற்றத்தை வலுப்படுத்துவதே மற்றொரு முன்னுரிமை என்ற திரு வோங், இதற்காக பள்ளிக்கு முந்திய கல்வி, பள்ளி நேரத்துக்கு பிந்திய ஈடுபாடு ஆகியவற்றுக்கு வளங்களை அமைச்சு அளித்துள்ளது என்றார்.
மேலும் கற்றல் பாதைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் பள்ளிக் கல்விக்கு அப்பால், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.
"கடந்த காலங்களில், பெரும்பாலோர் கல்வியையும் பணியிடத்தையும் இரண்டு தனி உலகங்களாகப் பார்த்தோம். ஆனால் இது இன்றைய காலத்துக்கு பொருந்தாது," என்று அமைச்சர் வோங் கூறினார்.
தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு மறுஆய்வு
தொடக்கநிலை 1 மாணவர் பதிவு முறையில், 2சி கட்டத்தில் அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து கல்வி அமைச்சு மறுஆய்வு செய்கிறது என்று கல்வி அமைச்சர் வோங் தெரிவித்தார்.
கட்டம் 2 சி என்பது தொடக்கநிலை 1 பதிவின் ஏழு கட்டங்களில் ஐந்தாவது ஆகும்.
இது எந்த வகையான முன்னுரிமை சேர்க்கையும் பெறாதவர்களுக்கானது. பள்ளி வளாகத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கானது.
தற்போதைய பதிவுமுறைப்படி, இந்தக் கட்டத்தின்கீழ் வரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியும் 20 இடங்களை ஒதுக்குகிறது.
அதிகப் போட்டி நிறைந்த கட்டமாக இது இருப்பதால் பள்ளிகள் குலுக்கல் முறையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டியிருக்கிறது.
எனவே, இது மறுஆய்வு செய்யப்படுவதாகக் கூறிய அமைச்சர், அனைத்து பின்னணிகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் பள்ளிகள் இடமளிக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டினார்.
2சி கட்டத்திற்கு மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தால் அதற்கு முந்தைய கட்டங்களில் போட்டி அதிகமாகும் என்பதைக் கல்வி அமைச்சு அறிவதாகத் திரு வோங் கூறினார்.
சிங்கப்பூர் பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் பள்ளித் தேர்வில் சிறந்த வாய்ப்பை வழங்க வேண்டும், குறிப்பாக பள்ளி அவர்களுக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்சத்தில்.
அதேநேரத்தில் தகுதிகளை அங்கீகரித்து சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதிலும் சமநிலை காணவேண்டும்.
எனவே, இதனைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றார் திரு வோங்.

