சிங்கப்பூரில் இதுவரை 350,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் முதற்கட்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் முதற்கட்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டிக்கொண்டதாக அவர் கூறினார்.
நேற்றைய நிலவரப்படி ஏறத்தாழ 215,000 பேர் கொவிட்-19 இரண்டாவது கட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தின்போது திரு கான் தெரிவித்தார்.
70 வயதுக்கும் அதிகமான 40,000க்கும் மேற்பட்ட முதியோர் முதற்கட்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம்மாத இறுதியிலிருந்து 60 வயதுக்கும் அதிகமான முதியோருக்கு முதற்கட்ட கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கும்.
நெருக்கடிநிலையிலிருந்து வெளிவர தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்துவரும் நிலையில் நீண்டகால சுகாதாரப் பராமரிப்பு விவகாரங்கள் தொடர்ந்து முக்கியமாக இருக்கும்.
உதாரணத்துக்கு, முதன்மைப் பராமரிப்பு வலுப்படுத்தப்படும். புதிதாக 12 பலதுறை மருந்தகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் மொத்தம் 32 பலதுறை மருந்தகங்கள் இருக்கும்.
மூப்படையும் மக்கள்தொகை காரணமாக சுகாதாரப் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார் திரு கான்.

