ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஹெப்பி ஃபிஷ் நீச்சல் பள்ளியின் பராமரிப்பு ஊழியர் 45 கிலோ குளோரின் தூளை சாக்கடையில் கொட்டியதால் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டது.
இந்தச் சத்தத்தைக் கேட்டு அந்த வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் திடுக்கிட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.30 மணி அளவில் நிகழ்ந்தது.
சாக்கடையில் குளோரின் தூளைக் கொட்டினால் இத்தகைய வெடிப்புச் சத்தம் கேட்கும் என்று தெரியாமல் பராமரிப்பு ஊழியர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சாக்கடை நீருடன் குளோரின் தூள் கலந்ததில் உருவான வாயு பெருமளவில் வெளி வருவதற்கு முன் தீயணைப்புப் படையினர் சாக்கடையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
இந்தச் சம்பவத்தால் சாக்கடைக் கட்டமைப்பும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் கழிவு நீரின் தரமும் பாதிக்கப்படவில்லை என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகவும் நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கழகம் கூறியது.

