மியன்மாரின் யங்கூன் நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க கண்ணீர்ப் புகை, நிலைகுலைய வைக்கும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினர்.
ராணுவ ஆட்சியை எதிர்த்து மியன்மாரில் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்புப் படையினர் கட்டவிழ்த்த வன்முறையால் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டனர்.
பொதுமக்களைக் கொன்றதற்கான மியன்மார் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநாவின் சிறப்பு மன்றத்திடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை மூர்க்கத்தனமாக அடக்க முயல்வதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டுவிட்டனர். கடந்த புதன்கிழமையன்று மட்டும் குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

