மியன்மாரில் அதிரடிச் சோதனைகள்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரில் அதிரடிச் சோதனைகள்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

2 mins read
01193502-c30c-415e-a35b-85da5bb7a1fd
-

மியன்மார் போலிசார் நேற்று மாண்டலே நகரில் பல்லாயிரக்கணக்கில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்ணீர்ப் புகை கொண்டு கலைத்தனர். மியன்மாரில் சென்ற மாதம் ராணுவப் படையின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின், அதை எதிர்க்கும் வண்ணம் குறைந்தது ஆறு நகர்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஆர்ப்பாட்டங்கள் பலவற்றைப் பாதுகாப்புப் படைகள் முறியடித்து வருகின்றன. நாட்டின் வடக்கே உள்ள ஷான் பகுதியில் அமைந்துள்ள லாஷியோவில் கண்ணீர்ப் புகையுடன் 'ஸ்டன்' கையெறி குண்டுகளையும் போலிசார் வீசியதாகக் கூறப்படுகிறது.

பாகான் என்னும் வரலாற்று சிறப்புமிக்க கோயில் நகரில் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதைக் கண்ட ஒருவர் கூறினார். இருப்பினும், பயன்படுத்தப்பட்டவை ரப்பர் குண்டுகளா அல்லது உண்மையான குண்டுகளா என்பது குறித்துத் தகவல் இல்லை. உயிரிழப்பு குறித்தும் இன்று இரவு எட்டு மணி நிலவரப்படி தகவல் ஏதும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், 'மியன்மார் நவ்' எனும் ஊடகக் குழுமம் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றில், யங்கூனில் ஆண்கள் சிலரை ராணுவத்தினர் தாக்குவதைக் காண முடிந்தது. இதற்கிடையே பல நகர்களில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவே நடந்தன.

மியன்மாரின் மாண்டலே நகரில்தான் மிகப் பெரிய அளவிலான குந்தியிருப்புப் போராட்டம் நடைபெற்றது. போலிசாராலும் ராணுவத்தினராலும் கொல்லப்பட்டோருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு ஆர்வலர்கள் தங்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

"பறவைகள், கோழிகளைக் கொல்வதைப் போல் அவர்கள் மக்களைக் கொல்கின்றனர். அவர்களை நாம் எதிர்க்காமல் என்ன செய்வது? நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்," என்று ஆர்ப்பாட்டத் தலைவர் ஒருவர் டாவே பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கமிட்டார்.

திருவாட்டி ஆங் சான் சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சிக்கான உள்ளூர் பிரசார மேலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டபோது உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

திரு கின் மாவுங் லாட் என்ற இறந்தவரின் மரணத்திற்குக் காரணம் அறியப்படவில்லை என்றாலும் அவரது உடலைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் ரத்தக் கறையுடைய துணி ஒன்று இறந்தவரின் தலையைச் சுற்றி இருந்ததைக் காண முடிந்தது. இதற்கிடையே ஜனநாயகத் தேர்தலை நடத்தவிருப்பதாகக் கூறியுள்ள மியன்மார் ராணுவம், அதற்கான தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.