குறுக்குத் தீவு ரயில் பாதை கட்டுமானத்துக்கு $356 மில்லியன்

1 mins read
ce110c32-2790-40bc-965f-2fb2e5b211a4
குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகளின்போது ஏவியேஷன் பார்க் நிலையத்துக்கும் லோயாங் நிலையத்துக்கும் இடையிலான சுரங்கப்பாதை வடிவமைத்துக் கட்டப்படும். படம்: சாவ்பாவ் -

குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்தவிருக்கும் ஜப்பானின் தாய்செய் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கும் சைனா ஸ்டேட் கன்ஸ்டிரக்‌ஷன் எஞ்சினியரிங் காப்பரேஷனின் சிங்கப்பூர் கிளைக்கும் நிலப் போக்குவரத்து ஆணையம் $356 மில்லியன் வழங்குகிறது.

இந்த 3.2 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகளை இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செய்யும்.

குறுக்குத் தீவு ரயில் பாதையில் இருவழி ரயில் தடங்கள் இருக்கும். இரண்டு தண்டவாளங்களைக் கொண்ட ஒரே சுரங்கப்பாதையை அமைக்க பெரிய துளையிடும் இயந்திரம் முதல்முறையாகப் பயன்படுத்தப்படும் என்று ஆணையம் கூறியது.

குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகளின்போது ஏவியேஷன் பார்க் நிலையத்துக்கும் லோயாங் நிலையத்துக்கும் இடையிலான சுரங்கப்பாதை வடிவமைத்துக் கட்டப்படும்.

இத்திட்டம் 2030ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுக்குத் தீவு ரயில் பாதைக்காக மற்ற கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்த ஏற்கெனவே மற்ற நிறுவனங்களுடன் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.

2019ஆம் ஆண்டில் வடக்கு-தெற்கு சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதியாக டெக் கீ எம்ஆர்டி நிலையத்துக்கான கட்டுமான பணிகளை ஏற்று நடத்தும் உரிமை ஷங்ஹாய் டனல் எஞ்சினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

பேருந்துகளுக்கான தடங்கள், சைக்கிள் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள வடக்கு-தெற்கு பாதை 2026ஆம்ஆண்டில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.