அதிபர் ஹலிமா யாக்கோப்: பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையான கொவிட்-19 சூழல்

அதிபர் ஹலிமா யாக்கோப்: பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையான கொவிட்-19 சூழல்

2 mins read
f2a62150-318e-4867-8d4b-c553608a2fbd
மகளிரின் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் விதத்திலான உடனடி, ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும் என அதிபர் ஹலிமா தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கொள்ளைநோய்ச் சூழல் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகக் கூறிய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பாலின சமத்துவத்தில் முன்னேற, அனைத்துலக அளவில் நாடுகள் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்கள் பாலின சமத்துவத்துக்கு முன்னுரிமை அளித்து, அதனை அவர்களது மேம்பாட்டுத் திட்டங்களில் மையப்படுத்தி கல்வி, பயிற்சி மற்றும் வேலைச் சந்தை தொடர்பான தகவல்களை இருபாலினரும் அணுக சம வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் திருவாட்டி ஹலிமா.

பாலினங்களுக்கிடையிலான ஊதிய இடைவெளியைக் குறைத்து மேம்பட்ட, அளவிடத்தக்க முன்னேற்றம் வேலையிடங்களில் தேவை என்றும் அவர் கூறினார். அனைத்துலக மகளிர் தினமான நேற்று தொடங்கி இரு நாட்களுக்கு சவுத் சைனா மார்னிங் போஸ்டின் ஏற்பாட்டில் நடத்தப்படும் 'வுமென் இன் அவர் டைம்' எனும் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா இவற்றைக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 சூழல் பெண்களை எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்கியிருப்பது குறித்து பேசிய அதிபர், மகளிரின் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் விதத்திலான உடனடி, ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமத்துவமின்மை அதிகரித்தால் அது சமுதாயச் சூழலை வலுவிழக்கச் செய்து, ஒற்றுமையைக் குலைத்து, மனித ஆற்றலில் சுணக்கத்தை ஏற்படுத்தி, எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும்.

அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதில் பெண்கள் பிரதிநிதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொழிநுட்பம் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மரபார்ந்த பிரிவுகளைத் தாண்டி மற்ற துறைகளிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய துறைகளாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் (Stem) ஆகிய துறைகளைக் குறிப்பிட்டார்.

வேலையிடங்களில் இரு பாலினத்தாருக்கும் இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைக்க இலக்குகள் நிர்ணயிக்குமாறு வர்த்தகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக, தலைமைத்துவ வேலைகள் உட்பட அனைத்து வேலைகளுக்கும் ஆள் எடுப்பதுடன், வாழ்க்கைத் தொழில் முன்னேற்றக் கொள்கை போன்றவற்றில் பாலின சமனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்..

அனைத்துலக அளவிலான பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், அதிகரிக்கும் சவால்களுக்கிடையே புதிய தலைமுறையினருக்கான மாற்றம், வாய்ப்புகளில் ஆசியப் பெண்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறும்.