கல்விக் கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள் உட்பட 150,000 பேருக்குத் தடுப்பூசி போடும் பணி நாளை (மார்ச் 10) முதல் தொடங்கும் என கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.
அத்தியாவசியச் சேவைகள் வழங்குவோருக்கு தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தும் சுகாதார அமைச்சின் முயற்சிகளின் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"குழந்தைகள் மற்றும் பெரும்பாலான நமது மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மருத்துவரீதியாகத் தகுதிபெறாத நிலையில், கல்விக் கழகங்களைப் பாதுகாப்பாக வைக்கும் விதத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு இது வலு சேர்க்கும்," என கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லீனியா கல்விக் கழகம், சிறப்புக் கல்வி பள்ளிகள், தொழில்நுட்ப கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போடப்படும்.
ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு வாரியத்தின் (ECDA) உரிமம் பெற்ற பாலர் பள்ளிகளின் பணியாளர்கள், கல்வி அமைச்சில் பதிவுசெய்த பாலர்பள்ளிகள், மேம்பாட்டுத் தேவையுடைய ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயிலக்கூடிய, ECDAவின் நிதி உதவி பெற்ற அல்லது அதில் பதிவு செய்த சிறப்புப் பள்ளிகளின் ஊழியர்களுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போடப்படும்.
மேலும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் முழுநேரக் கல்வி பயிலும் தனியார் கல்விக் கழகங்கள், மதராசாக்கள் ஆகியவற்றின் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். நிர்வாகப் பணியாளர்கள், பள்ளி மற்றும் சமூக அடிப்படையிலான மாணவர் பராமரிப்பு நிலைய பணியாளர்கள், சிறப்பு மாணவர் பராமரிப்பு நிலைய பணியாளர்கள், பள்ளிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் புத்தகக் கடை ஆகியவற்றின் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களை கல்வி அமைச்சு, சமுதாய மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு வாரியம் ஆகியவை அடையாளம் காணும் எனத் தெரிவிக்கப்பட்டது.

