தங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 63 முதலாளிகள் அந்த ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தவில்லை என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து மனிதவள அமைச்சு அவர்களுக்கு எதிராக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்த பிறகு அந்த முதலாளிகளில் பெரும்பாலானோர் ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தினர்.
எஞ்சியவர்களுக்கு எதிராக அமைச்சு வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் திரு ஸாக்கி கூறினார்.
"சிங்கப்பூரில் தங்கள் ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்களுக்கு முதலாளிகள்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். காயமடைந்த ஊழியர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் விமானப் பயணத்துக்குத் தகுதியானவர்களாக மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
"ஊழியர்கள் நாடு திரும்புவதற்கு முன் அவர்களுக்கு சேர வேண்டிய வேலையிட காயத்துக்கான இழப்பீடு, சம்பள பாக்கி போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களிடம் வேலை பார்த்த வெளிநாட்டு ஊழியர்களைக் கள்ளத்தனமாக அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்பிய இரண்டு முதலாளிகள் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்தது," என்றும் திரு ஸாக்கி விவரித்தார்.
மருத்துவ அவசரநிலைக்கு, முதலாளிகளின் அங்கீகாரக் கடிதம் இல்லாமலும் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவசரநிலை அல்லாத சம்பவங்களுக்கு மருத்துவமனைகள் ஊழியர்களின் முதலாளிகளிடமிருந்து அங்கீகாரக் கடிதங்களைக் கேட்கக்கூடும்.
அது அந்த சிகிச்சைக்கான செலவை முதலாளிகள் ஏற்பதற்கான உத்தரவாதக் கடிதமாகவும் கருதப்படும் என்றும் அமைச்சஸாக்கி சொன்னார்.
இந்த வழக்கத்தை மாற்ற முடியுமா என்று நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு ஸாக்கி, "இந்தக் கோரிக்கைகள் மருத்துவமனைகளிலிருந்து வருகின்றன. ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்களுக்குத் தாங்கள் பொறுப்பு என்று கூறும் கடிதங்களை முதலாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அவை விழைகின்றன.
"என்னைக் கேட்டால் அதற்கு தேவையில்லை என்பேன். ஆனால், மருத்துவமனைகளுக்கு மாறுபட்ட கண்ணோட்டம் இருக்கலாம். இதன் தொடர்பில் மருத்துவமனைகளின் நிர்வாகங்களுடன் தொடர்ந்து பணியாற்றி இதற்குத் தீர்வு காண முயல்வோம்" என்றார்.

