அகப்பட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு

அகப்பட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு

1 mins read
65ca7d16-dcdb-4ae6-9bd6-7ec5a145c26d
போலிசார் வீசும் கண்ணீர்ப் புகையிலிருந்து கேடயம் பயன்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி -

மேற்கத்திய நாடுகள், ஐநா ஆகியவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க மியன்மார் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து மியன்மாரெங்கும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இரவு நேர ஊரடங்கை எதிர்த்து நேற்று ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் கூடினர்.

சான்சோங் மாவட்டத்தில் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்ட இளம் ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

சான்சோங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க அவர்கள் நிலைகுலைய வைக்கும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர்.

வீடு வீடாகப் புகுந்து சோதனை நடத்தப்படும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தஞ்சம் அளிப்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

கட்டடம் ஒன்றில் மேலும் 15லிருந்து 20 ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தப்பிச் செல்ல வழியில்லாமல் மாட்டிக்கொண்டதாகவும் தற்போது அங்கிருந்து வெளியேறி வீடு செல்ல அனுமதி கிடைத்திருப்பதாகவும் தொலைபேசி மூலம் இளம் சமூக ஆர்வலர் ஷார் யா மோன் தெரிவித்தார்.