சிங்கப்பூரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திலிருந்து வெளியேறும் யூதர்களைக் கத்தியால் தாக்க திட்டமிட்டிருந்த சிங்கப்பூர் இளைஞர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முழுநேர தேசிய சேவையாளரான அமிருல் அலி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள மகேன் ஒபோத் யூத வழிபாட்டுத் தலத்தில் சனிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச் செல்லும் மூன்று யூத ஆடவர்களைக் கத்தியால் தாக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டையால் அமிருல் கோபமடைந்ததாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இன்று தெரிவித்தது.
இந்த மூன்று ஆடவர்களும் இஸ்ரேலில் தேசிய சேவை செய்திருப்பர் என்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்திருப்பர் என்றும் அமிருல் நம்பியதாக அது கூறியது.
ஆனால் தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டால் தம்மால் வீரமரணம் அடைய முடியாது என்ற கவலை எழுந்ததும் தாக்குதல் திட்டத்தை அமிருல் கைவிட்டார்.
மாறாக, காஸாவுக்குச் சென்று ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவில் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட அவர் திட்டமிட்டார்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான யூதர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்கள் சிங்கப்பூரில் தேசிய சேவை செய்திருப்பர் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று தெரிவித்தார்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமிருல் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் சண்முகம், பாலஸ்தீனர்களை ஆதரிப்பதைக் காட்ட அப்பாவி மக்களைக் கொல்ல அவர் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இது சிங்கப்பூரில் உள்ள சமய நல்லிணக்கத்தை வெகுவாகப் பாதித்திருக்கும் என்றார் அவர்.
சம்பந்தபட்ட யூத வழிபாட்டுத் தலத்துக்கு சிங்கப்பூரின் முஸ்லிம் சமயத் தலைவர்களுடன் அமைச்சர் சண்முகம் சென்றிருந்தார்.
"பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்குவது தப்பில்லை. ஆனால் அப்பாவி மக்களைக் கொல்வது மிகப் பெரிய குற்றம். அமிருல் நினைத்தது நடந்திருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருந்திருக்கும். தாக்குதலின் காரணமாக பறிபோகும் உயிர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையே இருக்கும் ஒற்றுமை சீர்குலைந்திருக்கும்," என்றார் அமைச்சர் சண்முகம்.
சிங்கப்பூரில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிவரும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று தெரிவித்தார்.
வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று அங்கு இறை வழிபாட்டில் ஈடுபடுவோரின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் அதிகரித்திருப்பதால் அவர்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஆனால் வழிபாட்டுத் தலங்கள் அனைவரையும் வரவேற்கும் இடமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவை கோட்டைகளாக மாறக்கூடாது என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.

