மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் செய்யும் ரயில்வே தொழிலாளர்களின் வசிப்பிட வளாகத்துக்குள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டது அந்நாட்டு பாதுகாப்புப் படை.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து, ராணுவ ஆட்சி நடப்புக்கு வந்த பிறகு, அரசாங்கத்துக்கு எதிரான 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்தும் வங்கிகள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவற்றில் வேலை நிறுத்தம் செய்து வருவோரில் யங்கூனில் உள்ள ரயில்வே ஊழியர்களும் அடங்குவர்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக பல தரப்புகளைச் சேர்ந்த மக்கள் தினமும் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அவர்களை ஒடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 60க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் 1,900க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், ரயில்வே தொழிலாளர்களின் வசிப்பிட வளாகத்துக்கு அருகில் பாதுகாப்புப் படையினர் இருப்பது தெரிந்தது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர், "போலிஸ் எங்களைக் கைது செய்யக்கூடும். எங்களைக் காப்பாற்றுங்கள்," என்று கூறுவதும் காணொளியில் இருந்தது.
போராட்டம் நடைபெறும் மற்றொரு நகரான மான்டலேயில், 'அமர்ந்திருப்பு' போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, திருவாட்டி ஆங் சான் சூச்சியின் என்எல்டி கட்சியைச் சேர்ந்த ஸா மியட் லின் எனும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த இரு நாட்களில் காவலில் இருக்கும்போது உயிரிழந்த, அந்தக் கட்சியைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர்.
போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் எனவும் அவரது உயிரிழப்புக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை என்றும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பெரும்பாலான புத்த பிக்குகள் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சாலைகளில் இறங்கி போராடி வரும் வேளையில், யங்கூனில் உள்ள பிங்கலர் மடாலயத்தைச் சேர்ந்த புத்த பிக்குகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்துகொள்வதாகவும் அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
நவம்பரில் நடந்த தேர்தலில் நியாயமற்ற முறையில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றியடைந்ததாக அவர்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

