முத்தரப்பு முயற்சியுடன் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தை சமாளிப்போம்

முத்தரப்பு முயற்சியுடன் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தை சமாளிப்போம்

2 mins read
c45f3518-81c3-4da2-a8f0-fe4c8672df1b
துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியாட். படம்: நிதி அமைச்சு -

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் அரசாங்க மற்றும் தொழிலாளர் ஆதரவு இயக்கங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தைச் சமாளிக்கும் வகையில் வலுவாகத் திகழலாம் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். வரவுசெலவுத் திட்டம் குறித்து இணையம் வழி நடந்த கூட்டம் ஒன்றில் திரு ஹெங் இவ்வாறு தெரிவித்தார். எப்போதும் இல்லாதவகையில் இந்த நெருக்கடி சூழலில் இருந்து நாம் மீட்சி பெற்று வருவதற்கு முத்தரப்பு ஒத்துழைப்பே காரணம். "நம்மிடம் உள்ள ஒட்டுமொத்த வலுவையும் வளங்களையும் ஒன்றுதிரட்டி, மாறி வரும் சூழலில் உருவாகும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் தொடர்பில் நிறுவனங்கள் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புத்தாக்க தளத்தில் பல்வேறு புது முயற்சிகளுடன் புதிய பங்காளித்துவங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், தனியார் மற்றும் பொதுத்துறைகள் ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடலாம். இதே கருத்தைத் தாம் சென்ற ஆண்டு கொள்ளைநோய் வேகமாகப் பரவி வந்த சூழலிலும் கூறியதை திரு ஹெங் நினைவுகூர்ந்தார். "தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. மீட்சிக்கான பாதை பல நிறுவனங்களுக்கு இடையே ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பல தொழில் நிறுவனங்கள் நிலைமையைச் சரிசெய்து கொண்டுள்ளன. "இதில் இருந்து என்ன தெளிவாகத் தெரிகிறது என்றால், கொள்ளை நோய்க்கு முன்பிருந்த சூழலுக்கு நாம் திரும்பப் போவதில்லை," என்று கூறினார். இதனால்தான் தற்போதைய வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய இலக்கு நிலைமையைச் சரிசெய்து கொண்டு வலுவாக மீண்டு எழுவதுடன் புத்தாக்கத்துடன் கூடிய வளர்ச்சி என்பதை நோக்கி அமைந்துள்ளது. சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய திரு ஹெங், "நிலைமைக்கேற்றவாறு தங்களைச் சரிசெய்து கொள்ள தற்போது நடைபெற்று வரும் அடிப்படை மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். "கொவிட்-19 கொள்ளை நோய்ச் சூழல் சில அடிப்படை மாற்றங்களை விரைவுபடுத்தியுள்ளது, குறிப்பாக மின்னிலக்கமயத் துறையில். மின்னிலக்கமய பொருளியலில் நீங்கள் அனைவரும் பங்குவகிக்க நாங்கள் உங்களைத் தயார்ப்படுத்துவோம். அவ்வாறு செய்வதன் வழி அதிரடி தொழில்நுட்ப மாற்றச் சுழலில் சிக்கி யாரும் பின்னுக்குத் தள்ளப்பட மாட்டார்கள்," என்று திரு ஹெங் கூறினார்.